சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் பெற்ற ஆறாம் வகுப்பு மாணவி நேகா!
சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் பெற்ற ஆறாம் வகுப்பு மாணவி நேகா!
UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM
ADDED : ஜூலை 28, 2014 11:44 AM
திருப்பூர்: சர்வதேச அளவில் நடந்த யோகாசன போட்டியில், சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை பெற்று, திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார் ஆறாம் வகுப்பு மாணவி நேகா.
திருப்பூர், திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி நேகா. யோகாசனங்கள் செய்வதில் கைதேர்ந்தவர். எல்.கே.ஜி., முதல் ஆறாம் வகுப்பு வரை, இவர் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தொடர் வெற்றியை நிலைநாட்டி வருகிறார்.
இவரது சாதனையை குறிப்பிட்டால், 2008ல் மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில் முதலிடம், மாநில அளவிலான போட்டியில் இரண்டாமிடம், 2009ல் தில்லையோக அறக்கட்டளை சார்பில் கஜயோகாஸ்ரீ விருது, 2010ல் மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம், 2011ல், தேசிய அளவிலான போட்டியில் அனைத்து பிரிவிலும் முதலிடம்.
சர்வதேச யோகா சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அளவில் தேர்வு, தேசிய அளவிலான ரேங்கிங் போட்டியில் முதலிடம், மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் முதலிடம், 2012ல் மாவட்டங்களுக்கு இடையேயான யோகாசன போட்டியில் இரண்டாமிடம், தேசிய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் முதலிடம்.
கடந்த 2013ல், வயது அடிப்படையில், சர்வதேச யோகாசன போட்டி நடத்தப்பட்டது. 10-15, 16-20, 21-25, 26-35, 36-40, 41-50 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்கிற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தந்த பிரிவுகளின் கீழ், சர்வதேச அளவில் சாம்பியன் பட்டத்தை பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்றனர். 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில், நேகா பங்கேற்றிருந்த நிலையில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், இவர் தட்டிச்சென்றுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச அளவில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் காரணமாக, திருமுருகன் மெட்ரிக் பள்ளியில், இவருக்கு கல்வி கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
