ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
UPDATED : அக் 28, 2014 12:00 AM
ADDED : அக் 28, 2014 11:33 AM
மதுரை: சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உசிலம்பட்டி ஜீவரத்தினம் தாக்கல் செய்த மனு: பி.லிட்., -பி.எட்.,(தமிழ் பாடம்) படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 91 மதிப்பெண் பெற்றேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்பட்டோர், மிக பிற்பட்டோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இதனால், தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 90 லிருந்து 82 ஆக குறைக்கப்பட்டது.
அரசு உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. ஐகோர்ட் பெஞ்ச், அரசு உத்தரவு செல்லாது என செப்.,26 ல் உத்தரவிட்டது. ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் நலத்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளில், சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், அப்பட்டியலில் உள்ளனர்.
சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் மற்றும் பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.

