மாநிலம் முழுவதும் ஊரக நூலக போட்டி : தமிழக அரசு உத்தரவு
மாநிலம் முழுவதும் ஊரக நூலக போட்டி : தமிழக அரசு உத்தரவு
UPDATED : டிச 11, 2009 12:00 AM
ADDED : டிச 11, 2009 09:53 AM
கோவை மாவட்டத்தில் 2006 முதல் 2008ம் ஆண்டு வரை 94 கிராம ஊராட்சிகளில், தமிழக அரசின் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தில் நூலகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. நூலகத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள், வல்லுனர்களால் எழுதப்பட்ட மற்றும் வல்லுனர்களை பற்றிய புத்தகங்கள், செய்யுள், இலக்கியம் உள்ளிட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த புத்தகங்களை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் ஊரக நூலக போட்டிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
மேலும், சிறுவர்கள், இளைஞர்கள் (இரு பாலரும்), பள்ளிகளில் படிக்காதவர்கள், பள்ளிப் படிப்பை இடையில் கைவிட்டவர்கள் போட்டிகளில் பங்கேற்க தகுதியானவர்கள். உலகம், இந்தியா, மாநிலம் மற்றும் மாவட்ட வரைபடங்களில் இடங்களை சுட்டிக்காண்பித்தல், ஞாபகத்திறனை பரிசோதிக்கும் நூலக புத்தகங்களை கண்டறிதல், பேச்சு போட்டி, கதை ஒப்புவித்தல் என நான்கு வகை போட்டிகள் நடக்கவுள்ளன. பேச்சுப்போட்டி தவிர, மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் மட்டுமே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் இரு இடங்களை பிடிப்போருக்கு 200, 150 ரூபாய் வீதம் ரொக்கப் பரிசும், போட்டியில் பங்கேற்கும் 100 பேருக்கு தலா 10 ரூபாய் மதிப்பிலான பென்சில், பேனா வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. வெற்றி பெறுவோருக்கு தகுதிச்சான்றிதழும், இதர போட்டியாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இதற்கான போட்டிகளை நடத்த நூலகத்துக்கு தலா 7,500 ரூபாய் வீதம் அரசு ஒதுக்கியுள்ளது.
அந்தந்த ஊராட்சிகள், தமது பொது நிதியிலிருந்து போட்டிக்கான செலவுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும், பின்னர் அரசு ஒதுக்கிய நிதியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கான போட்டிகள், வரும் 15ம் தேதிக்கு மேல் ஊரக நூலகங்களில் நடத்தப்படும் என தெரிகிறது.
