ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கான சோப்பு, எண்ணெய் நிதியில் முறைகேடு
ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கான சோப்பு, எண்ணெய் நிதியில் முறைகேடு
UPDATED : மே 26, 2024 12:00 AM
ADDED : மே 26, 2024 11:09 AM
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு சோப்பு, தேங்காய் எண்ணெய் வாங்கி கொள்ள மாதம் தோறும் வழங்கும் தொகை பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் மேலும் பல தாசில்தார், ஆர்.ஐ.,க்கள் சிக்க உள்ளனர்.
சிவகங்கையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கென 46 விடுதிகள் உள்ளன. இதில் 3000 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு 2022 ம் ஆண்டு வரை மாதம் சோப்பு, தேங்காய் எண்ணெய் வாங்க தலா ரூ.75ம், கல்லுாரி மாணவருக்கு ரூ.100ம் அரசு வழங்கியது.
தற்போது பள்ளி மாணவருக்கு ரூ.100ம், கல்லுாரி மாணவருக்கு ரூ.150 ம் உயர்த்தி வழங்குகிறது. இத்தொகை அந்தந்த மாணவர் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால், இம்மாவட்டத்தில் 2017 முதல் 2023 ஜூலை வரை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டிய சோப்பு, தேங்காய் எண்ணெய்க்கான தொகையை செலுத்தாமல் போலி பில் தயாரித்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார்
ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் ரூ.9 லட்சம் கையாடல் செய்ததாக, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர் மீது 2023 அக்டோபரில் வழக்கு பதிந்தனர்.
இந்த முறைகேட்டை அப்படியே நிறுத்திவிடாமல், 2017 முதல் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கலெக்டரின் பி.ஏ.,(கணக்கு) தலைமையில் தனி குழு அமைத்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
சிக்கும் தாசில்தார்கள்
தற்போது இந்த முறைகேடு குறித்த விசாரணையை மாவட்ட அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து நேர்மையான முறையில் விசாரணையை அரசு நடத்தினால், பல கோடி ரூபாய் முறைகேட்டிற்கு துணை போன தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், கருவூலக அதிகாரிகள் சிக்குவார்கள் என ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.