அரசு பள்ளி மேல்நிலை வகுப்புகளில் ஆங்கில வழி இல்லாததால் தவிப்பு
அரசு பள்ளி மேல்நிலை வகுப்புகளில் ஆங்கில வழி இல்லாததால் தவிப்பு
UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:54 PM
உடுமலை:
அரசுப்பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழிக்கல்வி இல்லாததால், மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 80க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்தவுடன், மேல்நிலைக்கல்வியை தொடர்வதற்கு மாணவர்கள், ஆர்வத்துடன் அரசுப்பள்ளிகளை தேர்வு செய்தாலும், அப்பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி இல்லாமல் போவது, சேர்க்கைக்கு தடையாக உள்ளது. பெரும்பான்மையான அரசு பள்ளிகளில், மேல்நிலை வகுப்புகள் தமிழ் வழியில் மட்டும்தான் உள்ளது.
மாணவர்கள், பத்தாம் வகுப்பு வரை, ஆங்கிலவழியில் படித்துவிட்டு, மேல்நிலையில் தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற நிலைக்கு மாற வேண்டியிருப்பதால், பெரிதும் சிரமப்படுகின்றனர்.
தொடர்ந்து ஆங்கில வழியில் படித்து விட்டு, தமிழ் வழியில் பாடங்களை படிப்பதற்கு சிரமப்படும் மாணவர்கள், இரண்டு வகுப்பிலும், பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு, மேல்நிலையிலும் ஆங்கிலவழி கல்வி இருக்கும் பள்ளிகளாக தேர்வு செய்கின்றனர்.
இப்பிரச்னையால், பல அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை சரிவை சந்தித்து வருகிறது. தற்போது துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் அனைத்தும், ஆங்கிலவழிக்கல்வியும் ஒரு பிரிவாக இருப்பதால், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பிலும் மாணவர்கள் அதேபோல் எதிர்பார்க்கின்றனர்.
இந்த காரணத்தினாலும், அரசு பள்ளிகளில் சமன்பாடில்லாத சேர்க்கை எண்ணிக்கை உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.