அரசு மருத்துவமனையில் பணிபுரிய... பயமாக இருக்கிறது! பாதுகாப்பு கேட்கும் பயிற்சி டாக்டர்கள்
அரசு மருத்துவமனையில் பணிபுரிய... பயமாக இருக்கிறது! பாதுகாப்பு கேட்கும் பயிற்சி டாக்டர்கள்
UPDATED : ஆக 20, 2024 12:00 AM
ADDED : ஆக 20, 2024 10:00 AM

கோவை:
டாக்டர்களுக்கு தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என, கோவை அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகள், படிப்படியாக நிறைவேற்றப்படும் என, டீன் நிர்மலா உறுதியளித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன், வாலிபர் ஒருவர் பெண் டாக்டரிடம் அத்துமீற முயன்றார். இதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பயிற்சி டாக்டர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, டீன் நிர்மலாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி., கேமரா, மின் விளக்குகள் பொருத்த வேண்டும், இரவு நேரங்களில் காவலாளிகளை நியமிக்க வேண்டும், டாக்டர்களுக்கு ஓய்வு அறை மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். ஆண் மற்றும் பெண் பயிற்சி டாக்டர்களுக்கு, தனித்தனியாக விடுதி ஏற்படுத்தி தரவேண்டும், மருத்துவமனை வளாகத்தில் வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்தி தரவேண்டும், பயிற்சி டாக்டர்களுக்கும் வாகன நிறுத்தம் தனியாக ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு வார்டுக்கும் போதுமான பயிற்சி டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
பெரும்பாலான வார்டுகளில் டாக்டர்கள் கை கழுவுவதற்கான தண்ணீர் வசதி மற்றும் போதுமான அளவு கையுறை விநியோகிக்கவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். டாக்டர்கள் பாதுகாப்புக்காக தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்றுள்ளன.
மனுவை பெற்ற டீன் நிர்மலா, பயிற்சி டாக்டர்களுக்கு தேவையான வசதிகளை படிப்படியாக செய்து தருவதாக உறுதி அளித்தார். முதற்கட்டமாக, மருத்துவமனை வளாகத்தில் சி.சி.டி.வி., கேமரா, மின் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.