சபர்பன் அரசு உதவிபெறும் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கும் விழா
சபர்பன் அரசு உதவிபெறும் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கும் விழா
UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 09:35 AM

கோவை:
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் வழங்கும் விழா, போத்தீஸ் குழுமத்தின் குருவம்மாள் அறக்கட்டளை சார்பில், ராம்நகர், சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
இத்துடன், புலியகுளம் புனித அந்தோணியார் ஆண்கள் பள்ளி, புனித தெரசா நடுநிலைப் பள்ளி, கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி, சுந்தராபுரம் வி.எஸ்.செங்கோட்டையா மேல்நிலைப் பள்ளி, அசோகபுரம் அரசு மேல்நிலை பள்ளிகளும் சேர்த்து தினமும், 360 பட்டம் இதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
போத்தீஸ் துணை தலைவர் சத்தியநாராயணன் பட்டம் இதழ்கள் வழங்கி பேசுகையில், தற்போது மாணவர்களிடம் நுால்கள் வழியான தேடல்கள் குறைந்து, இணையம் வழியான தேடல் தொடர்கிறது. நுால்கள் வாசிக்கும் பழக்கமும் குறைந்துவிட்டது. பெரிய பணக்காரர்கள் எல்லாம் புத்தகம் படித்தவர்கள்தான்.
நாளைய தலைமுறையான மாணவர் சமுதாயம், பொது அறிவை வளர்த்துக்கொள்வதுடன், நல்ல விஷயங்களை பரப்புரை செய்ய வேண்டும். இதற்கு, தினமலர் பட்டம் இதழ் உதவியாக இருக்கும், என்றார்.
முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் சித்ரா பேசுகையில், தமிழ் வாசித்தலை ஊக்குவிக்க தினமலர் பட்டம் உறுதுணையாக இருக்கும். தினமும் பத்திரிகை படிக்கும் பழக்கமும் மேம்படும். கட்டுரையில் புத்தாக்கம் காண, மாணவர்கள் தினமும் இவற்றை படிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும், என்றார்.
பள்ளி வணிகவியல் ஆசிரியர் பிந்து மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.