மாநகராட்சி அறிவுசார் மையத்தில் படிக்க வசதி இல்லை! வசதிகளை அதிகரிக்க கோரிக்கை
மாநகராட்சி அறிவுசார் மையத்தில் படிக்க வசதி இல்லை! வசதிகளை அதிகரிக்க கோரிக்கை
UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 09:37 AM

கோவை:
கோவையில் போட்டித்தேர்வுகளுக்கு, இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு படிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக, கோவை ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதிய நுாலகம் மற்றும் அறிவு சார் மையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்ததை விட, அதிகம் பேர் பயன்படுத்துவதால், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த அறிவுசார் மையத்தில், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், செமினார் ஹால் மற்றும் 180 பேர் அமர்ந்து படிக்கும் வாசிப்பறை என, பல நவீன வசதிகள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே மற்றும் வங்கி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, இந்த நுாலகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
சமீபத்தில் மத்திய, மாநில அரசு வேலைக்கான அறிவிப்பும், வங்கி, ரயில்வே மற்றும் அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணி இடங்களுக்கும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், போட்டித்தேர்வுக்கு படிப்பவர்கள், போட்டி போட்டுக்கொண்டு படிக்கின்றனர். அதனால் இந்த நுாலகத்துக்கு படிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 200 முதல் 250 பேர் படிக்க வருகின்றனர்.
ஆனால் நுாலகத்தில் 180 பேர் அமர்ந்து படிக்கும் அளவுக்கு மட்டுமே இடம் உள்ளது. அதனால் பலர் தரையிலும், நுாலக வளாகத்தின் திண்டுகளிலும், அமர்ந்து படிக்கின்றனர். நுாலகத்தின் மேல் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் ஒரு அரங்கு கட்டினால் அங்கு இன்னும், 100 பேருக்கு மேல் அமர்ந்து படிக்கலாம்.
இந்த நுாலகம் பொது நுாலகமல்ல. ஆனால் இங்கு குழந்தைகளுக்கு என, தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் யாரும் படிக்க வருவதில்லை. அதனால் அந்த அறையை மாணவர்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
ஷெட் அமைக்கிறோம்
மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் கூறுகையில், இவ்வளவு பேர் வருவார்கள் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேறு அறைகள் கட்ட இடமும் இல்லை. அதனால் மேல் தளத்தில் ஒரு செட் அமைக்கும் திட்டம் உள்ளது. வாசகர்கள் உணவு சாப்பிட வசதியாக, கேன்டீன் திறக்க டெண்டர் விடப்பட்டுள்ளது, விரைவில் வந்துவிடும். புத்தகங்கள் வாங்கித்தர, நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர், என்றார்.
வசதிகள் வேண்டும்?
போட்டி தேர்வர்கள் கூறியதாவது:
போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு, அரசு ஒரு நல்ல நுாலகத்தை திறந்து இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் இங்குள்ள சில குறைகளை சரி செய்ய வேண்டும். இந்த நுாலகத்தில், 3000 புத்தகங்கள் மட்டுமே உள்ளன. இரண்டு செய்தித்தாள்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன. அனைத்து நாளிதழ்களும் வாங்க வேண்டும். போட்டித்தேர்வுக்கான புதிய நுால்கள் தேவை. போதிய அளவு நாற்காலிகள், மேசைகள் இல்லை. சாப்பிட தனி இடம் இல்லை. பைகள் மற்றும் பொருட்களை வைக்க ரேக்குகள் இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.