தமிழ் படித்தோருக்கு முதுமை வருவதில்லை -- சுகி.சிவம்
தமிழ் படித்தோருக்கு முதுமை வருவதில்லை -- சுகி.சிவம்
UPDATED : ஜன 06, 2025 12:00 AM
ADDED : ஜன 06, 2025 07:00 AM
சென்னை:
தமிழுக்கும் தமிழ் படித்தோருக்கும் முதுமையே வருவதில்லை என சுகி சிவம் பேசினார்.
புத்தகக் காட்சியின் வெளி அரங்கில் கற்பதும் நிற்பதும் எனும் தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் பேசியதாவது:
மனதளவில் முதுமையை ஏற்றுக்கொண்டோருக்கு, இளமையிலேயே முதுமை வந்துவிடுகிறது. அதே வேளையில், தமிழுக்கும் தமிழ் படித்தோருக்கும் முதுமையே வருவதில்லை. ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, அதில் எதுவெல்லாம் நமக்குத் தேவையோ, அவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான் சொன்னதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, வள்ளுவர் சொன்னதில்லை. அதனால்தான், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்ற குறளை இயற்றினார்.
நம் கருத்தியலிலிருந்து மாற, மற்றவருக்கு உரிமை உண்டு. உலகிலுள்ள அத்தனை நன்மைகளையும் ஒருவரே செய்ய வாய்ப்பில்லை. ஆனால், நாம் செய்பவை அனைத்தும் மற்றவருக்கு நன்மை தருபவையாக இருக்க வேண்டும்.
நாட்டில் சமத்துவத்திற்கு சிலை வைக்கின்றனர். ஆனால், சமத்துவத்தின் நிலை என்னவாக உள்ளது? எத்தனையோ நுால்கள் வந்துவிட்டாலும், முழுமையான சமத்துவம் இன்னமும் வரவில்லை. பாரதி சொன்னதுபோல், மனிதர் நோக மனிதர் பார்க்கும் நிலை மாற வேண்டும்.
கற்ற நுால்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது என்று நினைப்பதுபோல், நமக்கு யாரும் அடிமையாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.