நிரப்பப்படாத நுாலகர் பணியிடங்கள் அரசு கல்லுாரிகளில் நுாலகங்கள் காட்சிப் பொருள்
நிரப்பப்படாத நுாலகர் பணியிடங்கள் அரசு கல்லுாரிகளில் நுாலகங்கள் காட்சிப் பொருள்
UPDATED : பிப் 10, 2025 12:00 AM
ADDED : பிப் 10, 2025 09:07 AM

கோவை :
அரசு கல்லுாரிகளில் நுாலகர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததால், நுாலகங்கள் காட்சிப் பொருளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 100 க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டிற்கு அனைத்து கல்லுாரிகளிலும் நுாலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இந்நுாலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், நுாலக செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட, நுாலகர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக அரசு நிரப்பாமல் உள்ளது. இதனால், 50 க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் நுாலகர்கள் பணியிடம் காலியாக உள்ளன. இப்பணியில், பேராசிரியர்களை பொறுப்பில் கல்லுாரி நிர்வாகம் அமர்த்தியுள்ளது.
பொறுப்பு வழங்கப்பட்டுள்ள, பேராசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணிகளை முடித்த பின்னரே நுாலகப் பணிகளை கவனிக்கின்றனர். இதனால், பல நேரங்களில் மாணவர்கள் நுாலகங்களை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. மேலும், பேராசிரியர்கள் விடுமுறையில் சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிறது. குறிப்பாக, ஆராய்ச்சி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாணவர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட நுாலகங்கள் காட்சிப் பொருளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நுாலகர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால், 50 க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் நுாலகர்கள் இல்லாமல் கூடுதல் பொறுப்பாக பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் புத்தகங்களை எடுக்க இயலாது.
நுாலகர் பொறுப்பிலுள்ள பேராசிரியர்கள் விடுமுறையில் சென்றால், அப்பணிகள் முழுமையாக தேங்கிவிடும். புத்தங்கள் அதிகம் தேவைப்படும் எம்.பில்., பி.எச்டி., மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் தள்ளப்படுகின்றனர். இதைக்கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.