மருத்துவ விடுப்பு கொடுக்க மறுத்ததால் சலைன் டியூபுடன் பள்ளி வந்த ஆசிரியர்
மருத்துவ விடுப்பு கொடுக்க மறுத்ததால் சலைன் டியூபுடன் பள்ளி வந்த ஆசிரியர்
UPDATED : மார் 10, 2025 12:00 AM
ADDED : மார் 10, 2025 01:54 PM
புவனேஸ்வர்:
உடல்நிலை சரியில்லை என்று கூறியபோதும், மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டதால், ஒடிசாவில் ஆசிரியர் ஒருவர், நேராக மருத்துவமனையில் இருந்து குளுக்கோஸ் ஏற்ற பயன்படும் சலைன் டியூபுடன் பள்ளிக்கு வந்தார்.
ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரகாஷ் போய். கடந்த 6ம் தேதி தன் தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வெளியூர் சென்றார்.
உத்தரவு
அதைத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ விடுப்பு கேட்டார். ஆனால், பள்ளியின் துணை தலைமையாசிரியரும், பொறுப்பு தலைமையாசிரியருமான விஜயலட்சுமி பிரதான் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
உடல்நிலை சரியில்லாத நிலையிலும், ஆசிரியர் பிரகாஷ், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆஜரானார்.
உடல்நிலை மேலும் மோசமானதால், மருத்துவமனை செல்வதற்கு அனுமதி கேட்டார். ஆனால், குறுகிய நேரமே அவகாசமாக வழங்கப்பட்டது. அருகில் மருத்துவமனைகள் இல்லாததால், போகாமல் இருந்தார்.
இரவில்தான் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். மறுநாள் காலையிலும் உடல்நிலை சரியில்லாததால், மருத்துவ விடுப்பு கேட்டார். பொறுப்பு தலைமையாசிரியர் மறுப்பு தெரிவித்தார்.
விசாரணை
இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால், சலைன் டிரிப் போடப்பட்டது.
நேரமானதால், சலைன் டியூபுடன் பள்ளிக்குச் சென்றார் ஆசிரியர் பிரகாஷ் போய். அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
வேண்டுமென்றே தனக்கு விடுமுறை மறுக்கப்பட்டதாகவும், மனரீதியில் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், ஆசிரியர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.