கணித உபகரண பெட்டி அனைத்துமாணவர்களுக்கும் வழங்க உத்தரவு: தினமலர் செய்தி எதிரொலி
கணித உபகரண பெட்டி அனைத்துமாணவர்களுக்கும் வழங்க உத்தரவு: தினமலர் செய்தி எதிரொலி
UPDATED : ஜூலை 17, 2025 12:00 AM
ADDED : ஜூலை 17, 2025 08:56 AM

                  மதுரை: 
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கணித உபகரணப் பெட்டி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு 21 இலவச அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் கணித உபகரணப் பெட்டி 6ம் வகுப்பில் மட்டும் வழங்கப்படுகிறது. இதுதவிர 7 முதல் 10 ம் வகுப்புகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும். 6ம் வகுப்பில் பெறும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஓராண்டிலேயே கணித உபகரண பெட்டியை மாணவர்கள் பயன்படுத்தி விட்டு, வெளியே விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்தது.
எனவே 6ம் வகுப்பில் பெற்றிருந்தாலும் 9ம் வகுப்பிலும் அனைத்து மாணவர்களுக்கும் இப்பெட்டி வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தின. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தியும் வெளியானது.
இதன் எதிரொலியாக அரசு, உதவிபெறும், கள்ளர், மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கணித உபகரண பெட்டிகள் வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.                

