புத்தக திருவிழா போன்று அறிவியல் புத்தாக்க விழா: திண்டுக்கல்லில் லோகோ வெளியீடு
புத்தக திருவிழா போன்று அறிவியல் புத்தாக்க விழா: திண்டுக்கல்லில் லோகோ வெளியீடு
UPDATED : செப் 09, 2025 12:00 AM
ADDED : செப் 09, 2025 08:13 AM
திண்டுக்கல்:
தமிழகத்தில் மாவட்டம் தோறும் நடக்கும் புத்தக திருவிழா போல் அறிவியல் திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்க உள்ளதால் அதற்கான துவக்கவிழா ,லோகோ வெளியீடு நடந்தது.
மாணவர்கள் மத்தியில் அறிவியல் பூர்வமான ஆக்கதிறனையும் சிந்தனைகளை வளர்ப்பதற்காக மாவட்டம்தோறும் நடக்கும் புத்தகத்திருவிழாவினை போன்று அறிவியல் திருவிழாவினை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை இணைந்து 2026 ஜனவரியில் நடத்த உள்ளது.
அறிவியல் புத்தாக்கத் திருவிழா என்ற தலைப்பில் நடக்க உள்ள இதற்கான லோகோ வெளியீடு துவக்க விழா நேற்று நடந்தது. திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு ஓட்டல் பார்சன்ஸ் கோர்டில் நடந்த இதற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டி மாறன் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் சரவணன் பேசுகையில், ''அறிவியல் சிந்தனைகளை மாணவர்கள், பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுரி இயற்பியல் துறை முன்னாள் தலைவரும், 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தமிழ்நாடு அறிவியல் மன்ற நிறுவருமான பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜனை நினைவுகூர்ந்து நடத்தப் படுகிறது.
இந்த விழாவின் நோக்கம் குழந்தைகளில் அறிவியல் சிந்தனை, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்து எதிர்கால புதுமையாளர்களை உருவாக்குவதேயாகும். திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் பள்ளியில் 2026 ஜனவரியில் 7 நாட்கள் இத்திருவிழா நடக்கிறது. 120க்கு மேற்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் நிறுவன அரங்குகள் இடம்பெறுகின்றன.
ரோபோட்டிக்ஸ் , தானியக்கம், ட்ரோன்கள் விமானவியல், விண்வெளி நீர், சுற்றுச்சூழல் பசுமை ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங், தரவியல் வேளாண் தொழில்நுட்பம்,டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன மாணவர்களுக்கான அறிவியல் திட்டப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.இதற்காக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பல சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது என்றார்.