சீர்குலைகிறது கோவை வேளாண் பல்கலை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு
சீர்குலைகிறது கோவை வேளாண் பல்கலை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு
UPDATED : அக் 26, 2025 09:45 AM
ADDED : அக் 26, 2025 09:46 AM

கோவை:
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஒன்பது ஆண்டுகளாக உதவி பேராசிரியர் நியமனங்களை மேற்கொள்ளாததாலும், பேராசிரியர் பதவி உயர்வுக்கு தேவையற்ற நிபந்தனைகள் வாயிலாக தடை ஏற்படுத்துவதாலும், பல்கலையின் கட்டமைப்பு குலைந்து வருகிறது.
கோவை வேளாண் பல்கலையில், அதன் நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், 1,400 பேர், உதவி பேராசிரியர் முதல், பேராசிரியர் வரையிலான நிலைகளில் பணிபுரிகின்றனர்.
உதவி பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் தான், பெரும்பாலும் கற்பித்தல் பணியில்ஈடுபடுவர்.
பல்கலையில், 2016க்குப் பின், உதவி பேராசிரியர் நியமனமே நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணைப் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வும் திட்டமிட்டு மறுக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
தற்காலிக பணியாளர் இதுபற்றி பல்கலையின் பேராசிரியர்கள் கூறியதாவது:
வேளாண் பல்கலையில், உதவி பேராசிரியர்களே இல்லை எனும் நிலை உருவாகப்போகிறது. உதவி பேராசிரியராக பணியில் சேர்வோர், பல்வேறு படிநிலைகளை கடந்து, 10 ஆண்டுகளில் இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவர்.
அந்த அடிப்படையில், கடைசியாக உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்கள், 2026 ஆகஸ்டில் இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்று விடுவர். அதன்பின், பல்கலையில் உதவி பேராசிரியர்களே இல்லை என்ற நிலை உருவாகி விடும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக புதிய நியமனம் நடைபெறவில்லை.
அதற்குப் பதிலாக, 'டீச்சிங் அசிஸ்டென்ட்' எனும் தற்காலிக பணியாளர் களை நியமித்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. 1,400 பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், 700 - 800 பேர் தான் பணிபுரிகின்றனர்.
ஏற்கனவே இந்த எண்ணிக்கையை, 1,700 ஆக உயர்த்த வேண்டும் என்று போராடி வரும் நிலையில், புதிய நியமனங்களை மேற்கொள்ளாமல், மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் வகையில், அரசு செயல்பட்டு வருகிறது.
பதவி உயர்வு மறுப்பு இது ஒருபுறம் இருக்க, விதிகளில் இல்லாத தேவையற்ற நிபந்தனைகளை விதித்து, பேராசிரியர்களுக்கு பதவி உயர்வை வழங்காமல் பல்கலை நிறுத்தி வைத்து விட்டது. இதனால், 300 இணைப் பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களின் போராட்டத்தை அடுத்து, அந்த நிபந்தனையை நீக்குவதாக பல்கலை நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், அதுதொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிதித்துறையில் இதுதொடர்பான கோப்பை வேண்டுமென்றே நிலுவையில் வைத்துள்ளனர்.
வேளாண் பல்கலையிலும் துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கையை, அரசு மேற்கொள்ளவில்லை. நிரந்தர துணைவேந்தருக்கும், பொறுப்பு துணைவேந்தருக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆராய்ச்சிக்கான நிதி கூட திரட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இவற்றைப் பார்க்கும் போது, வேளாண் பல்கலையின் கட்டமைப்பு குலைவது தெரிந்தும், தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. முதல்வர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் பெருமை மிக்க பல்கலையான வேளாண் பல்கலையின் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

