தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு : மதிப்பெண் விவரங்கள் வெளியீடு
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு : மதிப்பெண் விவரங்கள் வெளியீடு
UPDATED : நவ 19, 2025 07:35 AM
ADDED : நவ 19, 2025 07:40 AM

சென்னை:
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 2025-2026 கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்.,11அன்று நடத்தப்பட்டது.
தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இத்தேர்வினை 2,57,761 மாணவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வு, தமிழ்நாடு அரசின் 10-ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் நடத்தப்பட்டது. தற்போது, இத்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வில் தெரிவு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில், 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வர்களின் பெயர், முகப்பெழுத்து, பிறந்த தேதி மற்றும் பள்ளியின் நிர்வாக வகை (அரசுப் பள்ளி / அரசு உதவிப்பெறும் பள்ளி / தனியார் பள்ளி) ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின், அவற்றை நவ.,20 மாலை 5.00 மணிக்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநரிடமும் தெரிவிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.

