sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மகளிர் கல்லுாரி துவங்க அறிவிப்பு வெளியாகுமா? விருத்தாசலத்தில் மாணவிகள் எதிர்பார்ப்பு

அரசு மகளிர் கல்லுாரி துவங்க அறிவிப்பு வெளியாகுமா? விருத்தாசலத்தில் மாணவிகள் எதிர்பார்ப்பு

அரசு மகளிர் கல்லுாரி துவங்க அறிவிப்பு வெளியாகுமா? விருத்தாசலத்தில் மாணவிகள் எதிர்பார்ப்பு


UPDATED : ஜன 23, 2026 10:58 AM

ADDED : ஜன 23, 2026 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2026 10:58 AM ADDED : ஜன 23, 2026 11:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
விருத்தாசலம் பகுதியில் அரசு மகளிர் கல்லுாரி துவங்கிட சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என கிராமப்புற மாணவிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில், அதிக கிராமங்களை உள்ளடக்கியது, விருத்தாசலம் சட்டசபை தொகுதி. இங்கு, கடந்த 1966ம் ஆண்டு, கடலுார் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில், திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி துவங்கப்பட்டது.

பின்னர், 1969ல் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் வழங்கி, இளநிலை பி.ஏ., வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டன.

அதன்பின், 42 ஏக்கர் பரப்பளவில், தற்போது இயங்கி வரும் கல்லுாரி வளாகத்திற்கு கடந்த, 1971ம் ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டது.

அதே ஆண்டில், இளநிலை வணிகவியல் கடந்த, 1972ல் கணிதம், 1979ல் விலங்கியல், 1980ல் இயற்பியல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டன. கடந்த 1981ல் முதுகலை தமிழ், 1993ல் முதுநிலை முழுநேர தமிழ் ஆய்வியல் படிப்பு (எம்.பில்.,), 2000ம் ஆண்டில் இருந்து முழுநேர தமிழ் முனைவர் ஆய்வுப்பட்டம் (பிஎச்.டி.,) துவங்கியது.

கடந்த, 2002 - 03 வரை சென்னை பல்கலை.,யின் கீழ் இயங்கி வந்த இக்கல்லுாரி, தற்போது வேலுார் திருவள்ளுவர் பல்கலை.,யில் இணைக்கப்ப ட்டது.

அதன்பின் கடந்த, 2007ம் ஆண்டு முதல் காலை, மாலை என இருவேளை சுழற்சி முறைகளில் வகுப்புகள் நடக்கின்றன. கடந்த, 4 ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலை., கீழ் இயங்கி வருகிறது.

13 பாட பிரிவுகள்

பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், பி.பி.ஏ., வணிகவியல், பி.காம்., பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் உட்பட 13 பிரிவுகளில் வகுப்புகள் நடக்கிறது.

மேலும், முதுகலையில் அரசியல் அறிவியல், பி.பி.ஏ., பொருளியல் தவிர்த்து மற்ற பாட பிரிவுகளில் வகுப்புகள் நடக்கிறது. அதுபோல் அரசியல் அறிவியல், பி.பி.ஏ., பொருளியல், தாவரவியல், ஆங்கிலம் தவிர்த்து மற்ற துறைகளில் பி.எச்.டி., உள்ளது.

தற்போது, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 பாடப்பிரிவுகளும்; முதுநிலை பிரிவில் கணிதம், கணினி அறிவியல், ஆங்கிலம் ஆகியவையும் நடந்து வருகிறது.

காலை, மாலை என இரு வேளைகளில் நடக்கும் வகுப்புகளில் முதல்வர் உட்பட 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.

5 மாவட்ட மாணவர்கள் பயன்

இக்கல்லுாரியில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, வேப்பூர் உட்பட கடலுார் மாவட்டம் மட்டுமல்லாது, அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம், செந்துறை; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை மற்றும் விழுப்புரம், சேலம் மாவட்டங்களை ஒட்டிய 150க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள் படிக்கின்றனர். இதன் மூலம் 6,000 மாணவர்கள் காலை, மாலை வேளைகளில் படிக்கின்றனர்.

மாணவிகளே அதிகம்


இங்கு மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து வருகின்றனர். வழக்கமாக மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியானதும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் 65 முதல் 70 சதவீதத்தில் மாணவிகள் சேர்க்கை உள்ளது. மதிப்பெண் விகிதாச்சாரம், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் மாணவிகளே அதிகம் சேருகின்றனர். இதனால் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நீண்டகால கோரிக்கை


மாணவிகள் சேர்க்கை அதிகரிப்பு காரணமாக விருத்தாசலத்தில் அரசு மகளிர் கல்லுாரி துவங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் பின் தங்கிய மாணவிகள், அரசு கல்லுாரியில் சேர்க்கை கிடைக்காத நிலையில், பள்ளிப்படிப்புடன் கல்வியை கைவிடுவது தவிர்க்கப்படும்.

ஏழை எளிய பெற்றோர் கூடுதல் கட்டணம் செலுத்தி, தனியார் கல்லுாரிகளில் சேர்க்கை பெறுவதும் தடுக்கப்படும். மேலும், அரசு கல்லுாரியில் மாணவிகள் படிக்கும் போது தமிழக உயர்கல்வித்துறை வழங்கி வரும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறுவதுடன், அவர்களுக்கு கல்வியில் ஆர்வமும் அதிகரிக்கும்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதான கோரிக்கையாக விருத்தாசலம் தனி மாவட்டம், அரசு மகளிர் கல்லுாரி ஆகியன இருந்தது. ஆனால், நான்கரை ஆண்டுகளாகியும், தனி மாவட்டம், அரசு மகளிர் கல்லுாரி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது, இப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிப்பு வெளியாகுமா?

2026 தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் விருத்தாசலம் தனி மாவட்டம், அரசு மகளிர் கல்லுாரி போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரசு கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் என உதவித்தொகை வழங்கி வரும் தமிழக அரசு, விருத்தாசலத்தில் அரசு மகளிர் கல்லுாரி துவங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இது குறித்து காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார் கூறுகையில், 'விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற நாள் முதல், தனி மாவட்டம், அரசு மகளிர் கல்லுாரி துவங்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இங்கு, இளங்கலை, முதுகலை, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளும் ஒரு சேர அமைந்தது சிறப்பு வாய்ந்ததாகும்.

உயர்கல்வியில் மாணவிகள் அதிகமாக சாதித்து வரும் நிலையில், அவர்களை ஊக்கப்படுத்திட தமிழக அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதுபோல், மாணவிகள் நலன் கருதி விருத்தாசலத்தில் அரசு மகளிர் கல்லுாரி துவங்கினால், பின்தங்கிய இப்பகுதி மாணவிகளின் கல்வித்தரம் உயர வழிவகை ஏற்படும் .

நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் விருத்தாசலம் தனி மாவட்டம், அரசு மகளிர் கல்லுாரி போன்ற அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்,' என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us