ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது பதவி அல்ல; தலைமை பொறுப்பு: சைலேந்திரபாபு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது பதவி அல்ல; தலைமை பொறுப்பு: சைலேந்திரபாபு
UPDATED : மார் 29, 2026 10:28 PM
ADDED : மார் 29, 2026 10:30 PM

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.
அதில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், சென்னையில் நேற்று நடந்த 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,' என்ற தலைப்பில், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது:
எவ்வளவு வேலைகள் இருந்தாலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு வித்தியாசம் உள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகிய சிவில் சர்வீசஸ் பணி என்பது, வெறும் பதவி மட்டும் கிடையாது; அது, தலைமை பொறுப்பு.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு நாட்டை வழிநடத்தும் பொறுப்பு உள்ளது. தற்போது, தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலை நடத்துவது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தான். அவர்களின் ஒவ்வொரு கையெழுத்திற்கும் மிகப்பெரிய மதிப்பு இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும், 13 லட்சம் பேர், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில், 6 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில், 10,000 பேர், முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவர். அதில், 2,000 பேர் மட்டுமே, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறுவர். அவர்களில், 1,000 பேர் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவர்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற, ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி பழக வேண்டும். மேலும், செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் துவங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

