நன்கு படித்தவர்களே எளிதில் ஏமாறுகின்றனர்: டிஜிட்டல் கைது வழக்கில் கோர்ட் அதிர்ச்சி
நன்கு படித்தவர்களே எளிதில் ஏமாறுகின்றனர்: டிஜிட்டல் கைது வழக்கில் கோர்ட் அதிர்ச்சி
UPDATED : ஏப் 21, 2026 02:51 AM
ADDED : ஏப் 21, 2026 02:51 PM

புதுடில்லி:
'டிஜிட்டல் அரெஸ்ட் தொடர்பான மோசடியில், பெரும்பாலும் நன்கு கல்வியறிவு பெற்றவர்களே ஏமாறுவது அதிர்ச்சி அளிக்கிறது' என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
நாடு முழுதும், 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற மோசடிக்கு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலீஸ் உயரதிகாரிகள் போல தொலைபேசியில் பேசும் மர்ம நபர்கள், வீட்டு சிறையில் வைப்பதாக கூறி மிரட்டல் விடுத்து, அதில் இருந்து மீள குறிப்பிட்ட தொகையை பேரம் பேசுகின்றனர். இதற்கு பயந்து பலர், அந்த தொகையை செலுத்தி ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.
அப்பாவி மக்கள் இந்த மோசடியில் சிக்குவதை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு, 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.
இந்த அமர்வு முன், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு தெரிந்த மூதாட்டி ஒருவரும் இந்த மோசடியால் முழு ஓய்வூதிய பலன்களையும் இழந்துவிட்டதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நன்கு கல்வியறிவு பெற்றவர்கள் கூட, மோசடி பேர்வழிகளின் வலையில் எளிதாக விழுந்து ஏமாறுவது அதிர்ச்சி அளிக்கிறது,” என்றார். இதை தொடர்ந்து, இவ்வழக்கின் அடுத்த விசாரணையை மே 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இது வரை டிஜிட்டல் மோசடி மூலம் 54,000 கோடி ரூபாய் அப்பாவி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக, கடந்த 9ம் தேதி நடந்த விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி, தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து, நிலையான வழிகாட்டு நெறிமுறையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்” என, ஏற்கனவே உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், நாடு தழுவிய அளவில், 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகளை விசாரிக்க சி.பி.ஐ.,க்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

