தாகம் தீர்க்க நீர்; பசி போக்க தானியம்; விடுமுறையிலும் மாணவர்கள் ஜோர்!
தாகம் தீர்க்க நீர்; பசி போக்க தானியம்; விடுமுறையிலும் மாணவர்கள் ஜோர்!
UPDATED : மே 05, 2026 09:45 PM
ADDED : மே 05, 2026 09:46 PM
ஆனைமலை:
விடுமுறை நாளிலும், பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர், பசியை போக்க மைதானங்களில் தானியம் வைத்து செல்லும், பெத்தநாயக்கனுார் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் ஏப்., மாதம் வரை மதிய உணவு வேளையில் பள்ளி மைதானங்களில் பறவைகள் உணவுக்காக நாள்தோறும் வரும். அவைகளுக்கு, உணவு பருக்கைகள், தண்ணீர் ஆகியவை பள்ளி வளாகங்களில் கிடைக்கும் என்பதால் கூட்டமாக வந்து செல்லும்.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், பறவைகளுக்கு உணவு, தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆனைமலை அருகேயுள்ள பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பள்ளிக்கு வருகை தருகின்றனர். சிறிதளவு தானியங்கள், அதிகளவில் தண்ணீர் ஆகியவற்றை மைதானங்களில் வைத்து செல்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள சூழலில், நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இந்த நாட்களில், பள்ளிக்கு வரும் பறவைகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர், பசி போக்க உணவு வைக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஆசிரியர்கள் கூறுகையில், “கோடை விடுமுறையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பறவைகளுக்கு தண்ணீர், உணவு வைக்கும் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது. மரங்கள் காய்ந்து, நீர் வறண்டு காணப்படுகிறது. இச்சூழலில், அதற்கு தண்ணீர், தானியம் வைக்கும் பணி பாராட்டுக்குரியது,” என்றனர்.
