வேலை நிறுத்த உரிமை பாதுகாப்பு சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வேலை நிறுத்த உரிமை பாதுகாப்பு சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
UPDATED : மே 22, 2026 07:27 PM
ADDED : மே 22, 2026 07:35 PM
தி ஹேக்:
'சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முக்கிய ஒப்பந்தம், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமையைப் பாதுகாக்கிறது' என, சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஐ.எல்.ஓ., எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கை, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமையை வழங்குகிறதா என்பது தொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனை, 2023ல் கோரப்பட்டது.
கையெழுத்து
இதை விசாரித்த, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம், நேற்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கையை ஏற்று, 188 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இதன்படி, வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமையை, இந்த உடன்படிக்கை பாதுகாக்கிறது. அதே நேரத்தில், அந்தந்த நாடுகளின் சட்ட விதிகள், சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்கு உட்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் இந்த ஆலோசனை உத்தரவு, சட்டப்படி உலக நாடுகளை கட்டுப்படுத்தாது.
கட்டுப்பாடுகள்
அதே நேரத்தில், தொழிலாளர்கள் சட்டங்களில் திருத்தம் செய்வது, வேலைநிறுத்த உரிமை வழங்குவது தொடர்பாக நாடுகள் முடிவு எடுக்க ஒரு வழி ஏற்பட்டு உள்ளது. நம் நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தின்படி, வேலைநிறுத்தம் செய்வது அடிப்படை உரிமையாகக் கருதப்படவில்லை.
இது தொழில் தகராறு சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு, சில கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட உரிமையாக வழங்கப்படுகிறது.
