யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வு நிறைவு; கேள்விகள் கடினம் என தேர்வர்கள் கருத்து
யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வு நிறைவு; கேள்விகள் கடினம் என தேர்வர்கள் கருத்து
UPDATED : மே 25, 2026 06:59 PM
ADDED : மே 25, 2026 07:03 PM

புதுடில்லி:
நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு கடினமானதாக இருந்ததாக அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., இந்த ஆண்டு 933 காலிப் பணியிடங்களை அறிவித்தது. அதற்கான தேர்வில் பங்கேற்க மொத்தம் 8,19,372 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி, முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
காலையில் பொது அறிவுத்தாள் தேர்வு, மாலையில் சிசாட் எனப்படும் குடிமைப்பணி தகுதித் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் தாளில் பொருளாதாரம், அன்றாட அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், புவியியல், வரலாறு, கலாசாரம் என பல்வேறு தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
மொத்தமுள்ள 100 கேள்விகளில் அதிகளவாக பொருளாதாரத்தில் 19 கேள்விகள் தேர்வுத்தாளில் இடம்பெற்று இருந்தன. இம்முறை காலையில் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வு கடினமாகவும் மாலையில் நடைபெற்ற தேர்வு எளிதாக இருந்ததாகவும் அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டில் இருந்து முதல் முறையாக முதல்நிலைத் தேர்வு முடிந்த உடனேயே தேர்வு விடைக்குறிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிடுகிறது. இந்த புதிய முறையானது தேர்வு நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க, விண்ணப்பதாரர்கள் தங்களின் செயல்திறன் எப்படி இருந்தது என்பது விரைவாக மதிப்பிட வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
