நீதித்துறை பாடத்தின் உள்ளடக்கம் சரியானதே; சுப்ரீம் கோர்ட் கண்டித்த கல்வியாளர் திட்டவட்டம்
நீதித்துறை பாடத்தின் உள்ளடக்கம் சரியானதே; சுப்ரீம் கோர்ட் கண்டித்த கல்வியாளர் திட்டவட்டம்
UPDATED : மே 29, 2026 01:17 PM
ADDED : மே 29, 2026 01:18 PM
நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, பாடத்திட்டங்களை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரியில் 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற நீதித்துறையில் பல்வேறு மட்டங்களில் நிலவும் ஊழல் குறித்த பாடப்பிரிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரத்து
இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், 'சர்ச்சைக்குரிய பாடத்தை தயாரித்த மூன்று கல்வியாளர்களான பேராசிரியர் மைக்கேல் டேனினோ, சுபர்ணா திவாகர், அலோக் பிரசன்ன குமார் ஆகிய மூன்று பேரையும், எந்தவொரு கல்வி பணியிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுத்தக் கூடாது' என கூறி, கடந்த மார்ச் 11ல் உத்தரவிட்டது.
மூன்று பேராசிரியர்களும் விளக்கம் அளித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மார்ச் 11 உத்தரவில் சிறிய மாற்றம் செய்தது. மூன்று கல்வியாளர்களையும் கல்வி பணியில் ஈடுபடுத்துவதா? வேண்டாமா? என்பதை மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கே விட்டு விடுவதாக உத்தரவிட்டது.
இது குறித்து கல்வியாளர் மைக்கேல் டேனினோ நேற்று கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் மார்ச் 11 உத்தரவுக்கு பின், ஐ.ஐ.டி., காந்திநகரின் கவுரவ பேராசிரியர் வேலைக்கான ஒப்பந்தம் உடனடியாக ரத்தானது. இதனால், தொழில்முறையாக நான் பாதிக்கப்பட்டேன். இந்த விவகாரத்தை என்.சி.இ.ஆர்.டி., சரியாக கையாளவில்லை.
உறுதி
பாடத்திட்டம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்ற முழு விளக்கத்தையும், நீதிமன்றத்தில் என்.சி.இ.ஆர்.டி., தெரிவிக்காதது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
ஒரு விஷயம் அடிப்படையிலேயே ஆட்சேபகரமானது எனில், அதை நாங்களும் ஏற்கவே மாட்டோம். அந்த பாடத்தில் சில வாக்கியங்களோ, தலைப்போ வேறு விதமாக இருந்து இருக்கலாம். ஆனால், உள்ளடக்கத்தில் எந்த தவறும் இல்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பாடம் எழுத எடுத்துக்கொண்ட தரவுகள் அனைத்தும் உண்மையானவை; நம்பகமானவை. இதில், நீதித்துறையைத் தரம் தாழ்த்தும் நோக்கம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
