sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தாயார் காட்டிய வழியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான மோகனாவின் சாதனை பயணம்

தாயார் காட்டிய வழியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான மோகனாவின் சாதனை பயணம்

தாயார் காட்டிய வழியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான மோகனாவின் சாதனை பயணம்


UPDATED : ஜூன் 03, 2026 08:31 PM

ADDED : ஜூன் 03, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2026 08:31 PM ADDED : ஜூன் 03, 2026 08:34 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இளம் வயதில் மோகனாவுக்கு இருந்த பேச்சுத்திறமை மற்றும் விவாதப் போட்டிகளில் பங்கேற்றதில் இருந்த ஆர்வத்தை கண்டறிந்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என தூண்டியவர் அவரது தாயார் ஆவார். அந்த வழியில் கடுமையாக உழைத்த மோகனா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனாவை நியமிக்க தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மோகனா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

வாழ்க்கை வரலாறு


நீதிபதியாக பதவியேற்றுள்ள வி. மோகனாவின் வாழ்க்கை வரலாறு பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. மோகனாவின் மகிழ்ச்சி மற்றும் சிரித்த முகத்தை நீதிமன்ற வளாகங்களில் பலர் பார்த்திருந்தாலும், ஆரம்ப காலங்களில் அவரின் தைரியம், போராட்டம் மற்றும் கல்வியால் கிடைத்த மாற்றத்தை அவருக்கு நெருக்கமான சிலரே அறிந்திருப்பார்கள்.

பெரிய குடும்பம்


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்த மோகனா உடன் பிறந்தவர்கள் 12 பேர். மொத்தம் 13 குழந்தைகள் (9 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள்) கொண்ட அவரது குடும்பத்தில், கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் கல்வி ஆகியன வாழ்க்கைக்கு முக்கியமானவையாக கருதப்பட்டன.

அங்கீகாரம்


மோகனாவின் தந்தை வெங்கிட சுப்ரமணி ஐயர், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிறகு, தமிழக அரசில் பூச்சியியல் நிபுணராக வேலை பார்த்தார்.

ராணுவத்தில் அவர் பெற்ற ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவை வாயிலாக குடும்பத்தின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தார். தனது குழந்தைகள் ஒவ்வொருவரும் சிறந்து விளங்க வேண்டும் மற்றும் பொறுப்பு ஏற்பது முக்கியம் என்பதை கற்றுக் கொடுத்தார். தந்தை ஒழுக்கத்திற்கு அடித்தளம் அமைத்தாலும், மோகனாவின் திறமையை கண்டுபிடித்து அங்கீகரித்தது அவரது தாயார் காவேரி அம்மாள்.

அந்தக் காலத்தில் 5ம் வகுப்பு வரை படித்து இருந்த காவேரி அம்மாள், தனது மகள் மோகனாவிற்கு விவாதம், கட்டுரை எழுதுதல், பேச்சுத்திறமை மற்றும் விவாதங்களில் இருந்த ஆர்வத்தை கண்டறிந்தார். இதனை அவர் பொழுது போக்காக செய்யவில்லை. எதிர்காலத்தில் வழக்கறிஞராக மாறுவதற்கு மோகனாவுக்கு திறமை உள்ளது என்பதையும் கண்டுபிடித்ததுடன், வழக்கறிஞராக ஆகுமாறு ஊக்கப்படுத்தினார்.

அவரது குடும்பத்தில் அதற்கு யாரும் சட்டத்துறையில் யாரும் பணியாற்றியது இல்லை. தாயாரின் ஊக்கப்படி மோகனாவும் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக படித்தார். 10ம் வகுப்பு முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை அவர் தேசிய அளவிலான ஊக்கத்தொகை அவருக்கு கிடைத்தது.

கடின உழைப்பு


1983ம் ஆண்டு ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது கோவை சட்டக்கல்லூரியில் முதல் பேட்ச்சில் மோகனா படித்தார். அந்த நேரத்தில் தற்போது உள்ளது போன்ற வசதிகள் கல்லூரியில் இல்லை. வாடகை கட்டடத்தில் வகுப்பறைகள் இயங்கியது. நூலக வசதியும் போதுமானதாக இல்லை.

அப்போது படித்த 83 மாணவர்களில் 9 பேர் மாணவிகள். அவர்களில் மோகனாவும் ஒருவர். அப்போது கடின உழைப்பு, விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கற்றலில் அதிக ஆர்வம் என மற்றவர்களிடம் இருந்து மோகனா தன்னை வேறுபடுத்தி காட்டினார்.

அந்த நேரத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், அது தனது படிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு மோகனா பார்த்துக் கொண்டார். பெண்கள் விடுதியில் தங்கிப்படித்த அவர், டியூசன் எடுத்து தனது படிப்பு உள்ளிட்டவற்றுக்கான செலவுகளை பார்த்துக் கொண்டார். 1988ம் ஆண்டு சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். அவருடன் படித்தவர்களில் முக்கியமானவர் கே.வி.விஸ்வநாதன். இவர் மூத்த வழக்கறிஞர், அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகிய பதவி வகித்தவர். பிறகு வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

கோவையில் துவக்கம்


கோவையில் வழக்கறிஞர் பயிற்சியை துவக்கிய மோகனா 12 மணி நேரம் கடுமையாக உழைத்தார். பிறகு 1992ம் ஆண்டு டில்லி சென்று வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார்.

சீனியரும், ஜூனியரும்...

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஒருவர் பொறுப்பேற்க வேண்டுமெனில், ஐகோர்ட் நீதிபதியாக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்பது மரபு. வழக்கறிஞராக இருப்பவர் நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாவது என்பது மிகவும் அரிதானது.

அந்த வகையில், கடந்த 1950 முதல் தற்போது வரை வெறும் 10 பேர் மட்டுமே வழக்கறிஞராக இருந்து நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில், 11வது நீதிபதியாக வி.மோகனாவும் இணைந்துள்ளார்.

தவிர, பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவிற்கு பின், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த இரண்டாவது பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தள்ளது.

இதில், சுவாரஸ்யம் என்னவெனில், டில்லியில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக பயிற்சி செய்த போது, அவரிடம் ஜூனியராக பணியாற்றியவர் தான் தற்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்து மல்ஹோத்ராவிடம் பயிற்சி பெற்ற பிறகு மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், கபில் சிபல், கே.கே.வேணுகோபால், ப.சிதம்பரம், அருண் ஜெட்லி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். 2015ம் ஆண்டு மோகனாவுக்கு சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞராக அங்கீகாரம் கிடைத்தது.

வி.மோகனா, மூத்த குடிமக்களின் சொத்துரிமை, கர்நாடக ஹிஜாப் தடை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டவர் ஆவார்.

பொள்ளாச்சியில் பெரிய குடும்பத்தில் ஒருவராக பிறந்து, தனது கடுமையான உழைப்பின் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்ற பெரிய பதவியை அடைந்து மோகனா பெரிய சாதனை படைத்துள்ளார். அவரின் இந்த வரலாறு, இளம் தலைமுறையினர், பாரம்பரிய தடைகளை தாண்டி சாதனை படைக்க துடிக்கும் இளம்பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us