வெள்ளை அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
வெள்ளை அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
UPDATED : ஜூன் 18, 2026 10:42 AM
ADDED : ஜூன் 18, 2026 10:44 AM
மதுரை:
“தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை அரசு ஊழியர்களை பலிகடாவாக்கும் முயற்சியாக உள்ளது. நிதிஅமைச்சர் அந்த அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும்” என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பின் மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கையில் வணிகவரித் துறையின் வருவாய் செயல்திறன் குறைபாட்டுக்கு நிர்வாக திறமையின்மை, ஊழல் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது வணிகவரி அலுவலர்கள், ஊழியர்களின் சேவை மனப்பான்மையை இழிவுபடுத்துவதாக உள்ளது.
ஒரு மாநிலத்தின் வருவாய் அலுவலர்களின் செயல்பாடால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அரசின் கொாள்கை முடிவு, நிர்வாக, தலைமையின் திறன், காலியிடங்கள், தொழில்நுட்ப வசதிகள், பொருளாதார சூழல், அரசியல் தீர்மானங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவால் உருவாகிறது.
இவற்றைப் புறக்கணித்து, நேரடியாக வணிகவரித்துறை அலுவலர்கள், உதவியாளர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பது, அரசியல் வசதிக்காக அரசு ஊழியர்களை பலிகடாவாக்கும் முயற்சியே. கடந்த ஐந்து ஆண்டுகளில் அனுபவமிக்க அலுவலர்கள் புறக்கணிக்கப்பட்டனர். காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. நிர்வாக தலைமையின் குழப்பமான முடிவுகள், திட்டமிடல் குறைபாடுகள் காரணமாக வருவாய் நிர்வாகம் பாதித்தது.
வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற 'சிஸ்டமிக் கரப்ஷன்' என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதற்கு ஆதாரம் என்ன, யார் ஊழல் செய்தது, எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கான ஆதாரங்களை வெளியிட அரசு தயாரா. ஊழல் செய்த ஆதாரம் இருந்தால் குற்றவாளிகளை கைது செய்யுங்கள்.
வெள்ளை அறிக்கை தரவுகள் அடிப்படையில் உண்மைகளை முன் வைக்கும் ஆவணம். அதில் நிர்வாக தோல்விகளுக்கு அரசு ஊழியரை குற்றம்சாட்டுவது வருத்தத்திற்குரியது. உண்மை காரணங்களை ஆராயாமல் குற்றம் சாட்டக் கூடாது.
இதனை அரசு ஊழியர் சங்கம் ஒரு போதும் அனுமதிக்காது. வணிகவரி அலுவலர்கள், ஊழியர்களின் கண்ணியம், மனஉறுதியை காயப்படுத்திய அவதுாறான கருத்துக்களை நிதிஅமைச்சர் உடனே திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இல்லையெனில் மாநிலம் முழுவதும் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சூழல் உருவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
