தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவோயிஸ்ட் உதவியில் மருத்துவ படிப்பு சான்றிதழ் கோரிய மாணவி மனு தள்ளுபடி

மாவோயிஸ்ட் உதவியில் மருத்துவ படிப்பு சான்றிதழ் கோரிய மாணவி மனு தள்ளுபடி

மாவோயிஸ்ட் உதவியில் மருத்துவ படிப்பு சான்றிதழ் கோரிய மாணவி மனு தள்ளுபடி


UPDATED : ஜூன் 19, 2026 10:41 AM

ADDED : ஜூன் 19, 2026 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 10:41 AM ADDED : ஜூன் 19, 2026 10:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மாவோயிஸ்ட்களால் மருத்துவ படிப்புக்கு செலுத்தப்பட்ட கல்வி கட்டணம் முடக்கப்பட்டதால், சான்றிதழ் வழங்க கல்லுாரி நிர்வாகம் மறுத்ததை எதிர்த்து, பீஹாரைச் சேர்ந்த மாணவி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமியில், பீஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த மாணவி மருத்துவம் படித்து வந்தார்.

புலனாய்வு

மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து பெறப்பட்ட தொகையை கொண்டு, மருத்துவ மாணவி 1.13 கோடி ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தியதாக கூறி, அந்த தொகையை முடக்கி, தேசிய புலனாய்வு முகமை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் காரணமாக, மருத்துவ படிப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்க, கல்லுாரி நிர்வாகம் மறுத்தது.

இதையடுத்து, கல்வி கட்டணத்தை மீண்டும் செலுத்த நிர்ப்பந்திக்காமல், சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி, மருத்துவ மாணவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரலில், மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, மருத்துவ மாணவி தாக்கல் செய்த வழக்கை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கல்விச் சான்றிதழ்களை அடமானமாக வைத்து, கட்டணத்தை வசூலிப்பது சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் கூறியுள்ளன. இருப்பினும், இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் தொடர்பு உடையது.

நியாயமில்லை


மேலும், மனுதாரருக்கு பயிற்சி அளிப்பதற்காக, உள்கட்டமைப்பு வசதிகளை கல்லுாரி நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது. கல்விக்காக, எவ்விதமான கட்டணத் தொகையையும் முறையாக பெறாத நிலையில், சான்றிதழ்களை விடுவிக்குமாறு, அந்த கல்வி நிறுவனத்தை நிர்ப்பந்திப்பது நியாயமற்றது.

கல்வி கட்டணம் முடக்கப்பட்ட நிலையில், சான்றிதழ் வழங்கும்படியும் கல்லுாரியை நிர்ப்பந்திக்க முடியாது. முடக்கப்பட்ட பணத்தை விடுவிக்கக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தை மாணவி நாடலாம் அல்லது புதிதாக கட்டணத்தைச் செலுத்தி, சான்றிதழ்களை வழங்க கோரலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us