சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் முக்கிய பதவிக்கு இந்திய அதிகாரி தேர்வு
சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் முக்கிய பதவிக்கு இந்திய அதிகாரி தேர்வு
UPDATED : ஜூன் 22, 2026 10:32 AM
ADDED : ஜூன் 22, 2026 10:32 AM
பாரீஸ்:
பயங்கரவாத நிதி தடுப்புக்கான சர்வதேச அமைப்பின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி விவேக் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான, 'ஜி - 7' முன்முயற்சி காரணமாக, 1989 ஜூலையில் ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் எப்.ஏ.டி.எப்., எனும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழு தொடங்கப்பட்டது.
உலகளவில் அதிகரித்து வந்த கள்ள பணத்தை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க மட்டுமே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
கடந்த, 2001 செப்., 11ல் அமெரிக்கா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்கும் வகையில், இந்த அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது, பண மோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி தடுப்புக்கான சர்வதேச அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் பொதுக் குழு கூட்டம் பாரிசில் சமீபத்தில் நடந்தது.
இதில், மத்திய கலாசாரத் துறைச் செயலராக பணியாற்றி வரும் விவேக் அகர்வால், இந்த அமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தாண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலத்திற்கு அகர்வால் இப்பதவியை வகிக்க உள்ளார்.
கடந்த 1994ம் ஆண்டு மத்திய பிரதேச பிரிவு ஐ.ஏ.எஸ்., கேடரைச் சேர்ந்தவர் விவேக் அகர்வால். எப்.ஏ.டி.எப்.,க்கான இந்திய குழுவிற்கு ஏற்கனவே தலைமை தாங்கியுள்ளதுடன், எப்.ஐ.யு., எனும் இந்திய நிதி புலனாய்வு பிரிவின் இயக்குநராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
அகர்வால் நியமனத்திற்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த, 2010ல் இந்த அமைப்பில் இணைந்த பின், முதல்முறையாக சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பில், இந்தியா துணை தலைவர் பதவியை வகிக்க உள்ளது.
