தேர்வும், போட்டிகளும் ஒரே நேரத்தில் நடப்பதால் பல்கலை அளவில் தகுதியானவர்கள் கேள்விக்குறி
தேர்வும், போட்டிகளும் ஒரே நேரத்தில் நடப்பதால் பல்கலை அளவில் தகுதியானவர்கள் கேள்விக்குறி
UPDATED : நவ 13, 2026 01:29 PM
ADDED : நவ 13, 2026 01:30 PM
கோவை:
பாரதியார் பல்கலையின்கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 22 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள், 15 அரசு உதவிபெறும் கல்லுாரிகள், 109 சுயநிதி கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை ஏ, பி, சி, டி என, 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செப்டம்பர் இறுதி முதல் பல்கலை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் முடிந்துள்ளன. கோ-கோ, கபடி போன்ற போட்டிகள் அடுத்த வாரம் வரை நடக்கின்றன. இதில் வெற்றிபெறும் மாணவர்கள் அனைத்து பல்கலை இடையே டிசம்பர் 15 முதல் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்தாண்டு பாரதியார் பல்கலை போட்டிகள் தாமதமாகவும் அதுவும் பருவத்தேர்வு சமயத்திலும் நடத்தப்படுவதால் தேர்வுதான் முக்கியம் என்று அணிகள் பல பங்கேற்பதில்லை. சமீபத்தில், ஒரு மண்டலத்தில் நடந்த கோ-கோ போட்டியில் முன்பதிவு செய்திருந்த 12 அணிகளில் நான்கு அணிகள் மட்டுமே பங்கேற்றன.
இதே நிலை தான் பளுதுாக்குதல், தடகளம், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் நிலவியது. இதனால் திறமையான மாணவர்கள் இல்லாமல் போட்டியே இல்லாமல் போட்டிகள் நடந்துள்ளன. மேலும், தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் பலரது கனவு தகர்ந்துபோய் உள்ளது.
'வழக்கமாக ஜூலை-அக்டோபர் மாதத்துக்குள் பல்கலை போட்டிகள் நடத்தி முடிக்கப்படும். இந்தாண்டு நிர்வாக சிக்கல் காரணமாக செப்டம்பரில்தான் போட்டிகள் துவங்கின. வேறு வழியின்றி பருவத்தேர்வு சமயத்திலும் நடத்த வேண்டியுள்ளது. இனி இப்படி நடக்காது' என்கின்றனர் பல்கலை நிர்வாகிகள்.
உடற்கல்வி இயக்குனர்கள் கூறுகையில்,'இதுவரை போட்டிக்கு முன்பு பதிவு செய்யும் அணிகள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. வரும் காலங்களில் முன்கூட்டியே அணிகளுடன்கூடிய போட்டி அட்டவணை தயாரிக்க வேண்டும். 20 அணிகள் இல்லாமல் ஒரு மண்டலம் பிரிக்கக்கூடாது. இதனால் திறமை வாய்ந்தவர்களை வெளிக்கொண்டுவர முடியும். பல்கலை அளவிலான போட்டிகளிலும் பதக்கங்கள் அதிகம் குவிக்க முடியும்' என்றனர்.
