கல்லூரிகள் கருணை காட்டுமா? - பழங்குடியின மாணவர்கள் ஏக்கம்
கல்லூரிகள் கருணை காட்டுமா? - பழங்குடியின மாணவர்கள் ஏக்கம்
UPDATED : மே 20, 2011 12:00 AM
ADDED : மே 20, 2011 09:50 AM
கோவை: ஆனைகட்டி மலைப்பகுதியில் வசிக்கும் ஏழை பழங்குடி மாணவர்களுக்கு, கோவை கல்லூரிகளில் படித்து கலெக்டர் உள்ளிட்ட பெரிய பதவிகளில் அமர ஆசை. ஆனால் படிக்க இடம் அளிக்கும் கல்லூரிகள், தங்க இடம் தர தயாரில்லை என்பதால், படிப்பை தொடர வழி தெரியாமல் கண்ணீர் மல்க தவித்து நிற்கின்றனர்.
கோவை மாவட்டம் கோபநாரி, மானாறு, பறயன்கொம்பு, செங்குட்டை, காலனிபுதூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் 80 குடியிருப்புகள் உள்ளன. வனவிலங்குகள் நடமாடும் காட்டுப் பகுதி வழியாக தினமும் 8 கி.மீ., தூரம் நடந்து சீலியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 வரை படித்து முடித்துள்ள இங்குள்ள பழங்குடி மாணவர்கள், 800க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ், வக்கீல், பேராசிரியர் பணிகளுக்கு படிக்க இவர்களுக்கு ஆசை. இதற்கு அடிப்படையான பட்டப்படிப்பு முடிக்க வழிகாட்டல், வசதி இல்லாததால் முடங்கிக் கிடக்கின்றனர். கோவையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பழங்குடியின மாணவர்களுக்கான இடங்கள் காலியாகவே உள்ளன. ஆனால் இவர்களை சேர்த்துக்கொள்ள எவருக்கும் மனமில்லை. தங்கவும் இடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் காரணம்.
பல கல்லூரிகளை அணுகி கெஞ்சியபின் இறுதியில், கோவை அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பித்துள்ளனர். கண்டிப்பாக இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ள இவர்களை, எங்கு தங்கி படிப்பது என்ற கவலை தொற்றிக் கொண்டுள்ளது. இரண்டு மாணவர்கள், நான்கு மாணவியர் என, 6 பேர் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் கலெக்டர், வக்கீல், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் பதவிகளை பிடிக்க ஆசை.
கோபநாரியை சேர்ந்த மாணவியர் சிலர் கூறியதாவது: நாங்கள் வசிக்கும் பகுதியில் கல்வி, சுகாதார வசதி பெற, 8 கி.மீ., கீழே உள்ள சீலியூருக்குதான் செல்ல வேண்டும். காலையும் மாலையும் ஒரே அரசு பஸ்தான் உள்ளது. இந்த பஸ்சை விட்டால் மற்றொரு தனியார் பஸ்சில் கட்டணம் கொடுத்துதான் செல்ல வேண்டும். காலை 6.00 மணிக்கு பஸ் ஏறினால்தான் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியும். காலை வேளைகளில் சாப்பிட்டதே இல்லை. பஸ்சை விட்டு விட்டால், யானைக் காட்டில் நடந்தே செல்வோம். பெரிய பதவியில் அமர வேண்டும் என்ற வெறியால் சிரமப்பட்டு படித்தோம். மாலை 4.00 மணிக்குப் பின் உயிரே போனாலும் ஆம்புலன்ஸ் அல்லது சுகாதார அலுவலர்கள் வர மாட்டார்கள்.
மழைக் காலங்களில் ஆற்றை கடந்து செல்ல முடியாது என்பதால் பெரும்பாலான மழை நாட்கள் எங்களுக்கு விடுமுறைதான். ரோடு,பஸ், மருத்துவம், கல்வி ஆகியவற்றை பெற நாங்கள் அனுபவித்த சிரமங்களை, எங்கள் சந்ததியினர் அனுபவிக்கக் கூடாது. மாவட்ட கலெக்டர் ஆக இருந்தால்தான் இக்குறைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதால் அப்பதவிக்கு படிக்க ஆசை. எங்களை நன்கு படிக்க வைக்க பெற்றோருக்கும் ஆசை. ஆனால் தங்கி படிக்க வசதி இல்லை. ஏதாவது ஒரு கல்லூரி நிர்வாகம் படிப்புடன் விடுதி வசதியும் தந்தால், கல்லூரி படிப்பு போக மீதமுள்ள நேரங்களில் பகுதி நேர வேலை பார்த்து பிற செலவுகளை சமாளித்துக் கொள்வோம். தங்க வசதி கிடைக்கவில்லை என்றால், சிரமப்பட்டு படித்த படிப்பு அத்தனையும் வீணாகி விடும். மீண்டும் மலைப்பகுதிக்கு சென்று ஏதாவது காட்டு வேலையை பார்க்க வேண்டியதுதான். இவ்வாறு, அவர்கள் கண்ணில் நீர் மல்க தெரிவித்தனர்.
