இடைநிலை ஆசிரியர் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
இடைநிலை ஆசிரியர் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
UPDATED : ஜன 01, 1970 05:30 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமன உத்தரவு, பதிவு மூப்பின் அடிப்படையில், 7,000 பேருக்கு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட அடிப்படையில் அல்ல என்றும் தெரிவித்தது.
கல்வியின் தரத்தைக் கருத்தில் கொண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ஆரம்பப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு கொள்கை ரீதியிலான முடிவை மேற்கொண்டது. இதையடுத்து, ஆரம்பப் பள்ளிகளில், 7,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மாவட்ட வாரியாக, அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், அரசு உத்தரவை ரத்து செய்ததுடன், வேலையில்லா இடைநிலை ஆசிரியர் நலச் சங்கம் உட்பட சிலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், ஆசிரியர் பணியிடம் தொடர்பாக, அரசு உத்தரவில் திருத்தங்களைச் செய்து, தகுதியுள்ள அனைவருக்கும் சட்டப்படி வாய்ப்புகளை வழங்குமாறும், இது சம்பந்தமாக, விளம்பரங்களைத் தருவதன் மூலம், பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்துள்ளவர்களும் பயன் பெறுவார்கள் என்றும் யோசனை கூறியது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பஞ்சால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.
தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர் பணி நியமன உத்தரவு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, தகுதியுள்ள நபர்களுக்கு வழங்கப்படும், விளம்பரம் மூலம் அறிவிப்பு கொடுக்கப்படும். குறிப்பிட்ட பள்ளியில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு வெளியில், பணியிட மாறுதல் கோர முடியாது. இதற்கு கோர்ட் அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அந்தியார்ஜுனன் கூறினார். தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது.
