சத்துணவு சரியாக போடுவதில்லை: தலைமை ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார்
சத்துணவு சரியாக போடுவதில்லை: தலைமை ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார்
UPDATED : ஆக 05, 2013 12:00 AM
ADDED : ஆக 05, 2013 08:37 AM
கரோ: "மேகாலயாவில், மதிய உணவுத் திட்டம், சரியாக செயல்படுத்தப்படுவதில்லை" என, பள்ளித் தலைமை ஆசிரியர் மீது, மாணவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மேகாலயா மாநிலம், மேற்கு கரோ மலை மாவட்டத்தில் உள்ள, பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்கள், தங்கள் தலைமை ஆசிரியர் குறித்து, போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த, ஜனவரி முதல், எங்கள் பள்ளியில், மதிய உணவு வழங்கப்படுவதில்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், கல்வி பயிலும் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவை, பள்ளி தலைமை ஆசிரியர், அப்துஸ் சோபர் பின்பற்றவில்லை.
இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை, அவர், முறைகேடாக பயன்படுத்தி வருகிறார். இதற்கு உடந்தையாக, பள்ளியின், உதவி தலைமை ஆசிரியர், நூர் ஹுசேன் உள்ளார். எங்கள் பள்ளியில், கடந்த, ஆறு மாதங்களுக்கும் மேலாக, எவ்விதமான நிர்வாகக் கமிட்டியும் அமைக்கப்படவில்லை.
அது போல், மத்திய அரசால், சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித் தொகையும், எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, தலைமை ஆசிரியரிடம் கேட்டால், மாற்று சான்றிதழ் (டி.சி.,) கொடுத்து, வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என, மிரட்டுகிறார்.
அதுபோல், அவரது மகன்களும், பள்ளி விதிகளை மீறுவதுடன், சக மாணவர்களையும் அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இவ்வாறு, புகாரில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட, 23 மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில், தங்களுக்கு, மதிய உணவே வழங்கப்படுவதில்லை என, மேகாலயா மாணவர்கள், புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.