படிக்க வந்த இடத்தில் படிகளை காணோம்: மேலூர் நூலகத்தில் அதிர்ச்சி
படிக்க வந்த இடத்தில் படிகளை காணோம்: மேலூர் நூலகத்தில் அதிர்ச்சி
UPDATED : ஆக 26, 2013 12:00 AM
ADDED : ஆக 26, 2013 07:55 AM
மேலூர் செக்கடியில் 1957ல் வாடகை கட்டடத்தில் நூலகம் திறக்கப்பட்டது. புத்தகங்கள் அடுக்க இடவசதி இல்லை. இக்கட்டடத்தை அதிக வாடகைக்கு விட, அதன் உரிமையாளர் முடிவு செய்து, நூலகத்தை காலி செய்யுமாறு 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார். ஆனால், வேறு இடம் கிடைக்காததால், அதே இடத்தில் நூலகம் இயங்குகிறது. இதனால், முன் பக்க வழியை உரிமையாளர் அடைத்து விட, ஒரு ஓட்டலின் கழிவு நீர் செல்லும் பின்பகுதி, நூலகத்திற்கு வாசலாக மாறியது.
பராமரிப்பு இல்லாத மாடி படிகள் வழியாக, வாசகர்கள் நூலகத்திற்கு சென்று வந்தனர். கட்டடத்தை மராமத்து செய்து தர உரிமையாளர் மறுத்ததால், பல இடங்களில் ஒழுக ஆரம்பித்தது. கம்ப்யூட்டர்கள் போன்றவைகளை சரிவர பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை நூலகத்தை திறக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மாடிப்படிகள் மற்றும் கைப்பிடி சுவர் இடிக்கப்பட்டிருந்தது. இதனால், நூலகத்தை திறக்க முடியாமல் அலுவலர்களும், வாசகர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நூலகர் சீதாலட்சுமி கூறியதாவது: இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நூலகத்திற்கு பல இடங்களில் வாடகைக்கு இடம் தேடியும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாததால், நாளை (இன்று) இடிபாடுகளை அகற்றிவிட்டு, மாடி கைப்பிடி இல்லாவிட்டாலும் நூலகம் திறக்கப்படும், என்றார்.
