கடல்நீரின் குணாதிசயங்களை பாதுகாக்க தேசிய அளவிலான பயிற்சி முகாம் துவக்கம்
கடல்நீரின் குணாதிசயங்களை பாதுகாக்க தேசிய அளவிலான பயிற்சி முகாம் துவக்கம்
UPDATED : செப் 13, 2013 12:00 AM
ADDED : செப் 13, 2013 09:02 AM
ராமநாதபுரம்: மதுரை காமராஜ் பல்கலை, கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சி துறையின் சார்பில், ராமநாதபுரம் புதுமடத்தில் தேசிய அளவில் முதன் முறையாக, கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, கடல்நீரின் குணாதிசயங்கள் மற்றும் மாசுபடுவதை தவிர்ப்பது குறித்த பயிற்சி முகாம் துவங்கியது.
புதுமடத்தில் செயல்படும், மதுரை காமராஜ் பல்கலை கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சி துறையில், மாணவர்கள் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். இங்கு கடல்நீரின் குணாதிசயங்களை அறிவதற்காகவும், மாசுபடுவதை தடுப்பதற்காகவும், கடல் சுற்றுப்புற சூழல் அறிந்து பரிசோதனை செய்வதற்கான 5 நாள் பயிற்சி முகாம் துவங்கியது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் குமரகுரு துவக்கி வைத்தார்.
டில்லி புவியியல் அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் சுப்பிரமணியன், "கடல் தன்மை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், எதிர்காலத்தில் எப்படி பாதுகாப்பது" என விளக்கினார்.
மண்டபம் கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் முதன்மை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் நம்மாழ்வார் பேசும் போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், கடலில் கலக்கும் நச்சுத்தன்மையால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. காப்பாற்ற வேண்டிய முயற்சிகள் மற்றும் நச்சுத்தன்மையின் நிலை, அதை கணக்கீடு செய்வது, கடலின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.
கர்நாடாகா, ஒடிசா, தமிழகத்தின் பல பல்கலைகளின் ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். துறை ஏற்பாடுகளை பேராசிரியர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.
