தனியாருக்கான அரசு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களிடையே ஆர்வமில்லை
தனியாருக்கான அரசு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களிடையே ஆர்வமில்லை
UPDATED : செப் 23, 2013 12:00 AM
ADDED : செப் 23, 2013 11:24 AM
ஆனால், தனியார் நிறுவனங்களில் உதிரிப்பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, மாவட்ட நிர்வாகம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்களில் இளைஞர்கள் ஆர்வம் காட்டாமலே உள்ளனர். இதற்கு, வழங்கப்படும் வேலைகளில் குறைந்த ஊதியம் மற்றும் பணி நிரந்தரமின்மை தான் காரணம் என, கூறப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், மறைமலைநகர், சிறுசேரி ஆகிய இடங்களில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் இயங்கும் 545 தனியார் நிறுவனங்களில் துப்புரவு, காவலர், தோட்ட பராமரிப்பு, அலுவலக உதவி போன்ற பணிகளுக்கு 3.5 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இவை, ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்களை அழைத்து வரும் முகவர்கள் மூலம் நிறப்பப் படுகின்றன.
பணியாளர் பற்றாகுறை
பணியாளர்களை அழைத்து வரும் முகவர்கள், பெரும்பாலும், பிற்பட்ட மாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பணியமர்த்துகின்றன. ஆனால், சூழல் வேறுபாடு, பணியில் பிடிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால், இவர்களை தக்க வைத்துக்கொள்வது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏறத்தாழ 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இது குறித்து, தனியார் நிறுவனங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தன. அதையடுத்து, கடந்த ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இவற்றில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையமும், தனியார் நிறுவனங்களுக்கு, பணியாளர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டு உள்ளன.
ஈ ஆடும் முகாம்கள்
இந்த முகாம்களில், "தேர்வு பெறுபவர்களில், பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு 4,500 ரூபாயும், தொழிற் பயிற்சி பெற்றோருக்கு 5,500 ரூபாயும், தொழிற் பயிற்சியில் பட்டயம் பெற்றோருக்கு 7,000 ரூபாயும் சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது," என, அரசு வேலைவாய்ப்பக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பளம் இவ்வளவு இருந்தும், பணியிடங்கள் காலியாக இருந்தும், கடந்த 2012ல் நடந்த முகாமில் 500 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதில், 235 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, கடந்த மாதம் வரை, இரண்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில், மொத்தம் 1,217 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதில், 245 பேருக்கு வேலை கிடைத்து உள்ளது.
காரணம் என்ன?
கடந்த சில ஆண்டுகளாக, இளைஞர்களின் எதிர்பார்ப்பு மாறியுள்ளதால், வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்ற கருத்து அவர்கள் மத்தியில் உள்ளது. இது குறித்து, முகாமில் பங்கேற்ற காஞ்சிபுரம் வாலிபர் ஒருவர் கூறியதாவது:
"நான் இரண்டு முகாம்களில் பங்கேற்று உள்ளேன். ஒவ்வொரு முகாமிலும், 15 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், ஆட்களை தேர்வு செய்ய வருகின்றன. தொழில் பழகுனர் என்ற நிலையில்தான் ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
இதனால், மிகவும் குறைவான ஊதியத்தையே நிர்ணயம் செய்கின்றனர். அனுபவம் வாய்ந்தவர்களுக்கு, இங்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. நிலையான பணியும் இருப்பதில்லை என்பாதால், முகாமில் பங்கேற்க ஆர்வம் இல்லை." இவ்வாறு, அவர் கூறினார்
மேலும், இந்த முகாம்களில், அளிக்கப்படும் வேலை வாய்ப்புகள் தொழில் கற்றலை ஏற்படுத்தாத, யாரும் செய்யக் கூடிய உதிரி பணிகள் என்பதால், இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் கவனம் செலுத்தி, தொழில்நுடப் கற்றலை ஏற்படுத்தக்கூடிய வேலைகளுக்கும் முகாம்கள் மூலம் பணியாளர்களை எடுத்தால், மாவட்டத்தை சேர்ந்த, படித்த இளைஞர்கள் பயன் பெறுவர்.
