ஷர்ப் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு ஏற்ப உலகத் தரத்தில் பாம்பன் கடற்கரை
ஷர்ப் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு ஏற்ப உலகத் தரத்தில் பாம்பன் கடற்கரை
UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM
ADDED : ஜூலை 21, 2014 11:20 AM
ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், குருசடை தீவு, சிங்கிள் தீவுகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. இங்குள்ள அழகிய கடற்கரையில் ஆண்டு தோறும் மிதவேகத்தில் வீசும் காற்றும் ஷர்ப் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.
ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள இந்த விளையாட்டுக்கு இந்தியாவில் வரவேற்பு இல்லையென்றாலும், அதை குறைந்த செலவில் கற்றுத்தர மும்பையை சேர்ந்த பயிற்சியாளர்கள் ஜிகான், ஷார்மின் பெரேரா இருவரும் குந்துகால் கடற்கரையில் செட் அமைத்து தங்கி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
இதற்காக மத்திய, மாநில அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர். இவர்களிடம் மும்பை, கோவா, பெங்களூரு மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளை சேர்ந்த நூற்றுக்கு மேலான வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 10 மணி நேரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இங்கு மண்டபம் கடலோர காவல் படை கமாண்டர் முரே, ராணுவ அதிகாரி கர்னல், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் பலரும் உற்சாகத்துடன் ஷர்ப் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் ஜிகான் கூறியதாவது: இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு உள்ள முக்கியத்துவம், ஷர்ப் ஸ்கேட்டிங்கிற்கு கிடையாது. உடல் ஆரோக்கியத்திற்கான இந்த விளையாட்டு, ஒலிம்பிக்கில் உள்ளதால், அதில் இந்தியர்கள் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே லட்சியம்.
இங்குள்ள அழகிய கடல் நீர், கடற்கரை, மிதமான காற்று ஆகியவை உலக தரத்துக்கு இணையாக உள்ளதால், இந்த இடத்தை தேர்வு செய்தோம். இங்கு ஒரு நாளைக்கு ஒரு வீரருக்கு 2 மணி நேரம் மட்டுமே பயிற்சி அளிக்க முடியும். 18 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் இப்பயிற்சியில் ஈடுபடலாம் என்றார்.
