அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை; பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் கவலை
அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை; பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் கவலை
UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM
ADDED : ஜூலை 23, 2014 11:20 AM
பந்தலூர்: "பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துக்குமார் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு: கொளப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகள் தேயிலை தோட்டங்களும், பழங்குடியினர் மற்றும் இதர குக்கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது.
இப்பகுதியில் உள்ள பள்ளி கடந்த 2002ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தி 12 ஆண்டுகள் கடந்தபோதும் 27ஆசிரிய பணியிடங்கள் காலியாகவே உள்ளன. நடப்பு கல்வியாண்டில் கணிதவியல், தமிழ், தாவரவியல், வேதியியல், விலங்கியல், பொருளியல், ஆங்கிலம், வரலாறு, கணிதம் என 9 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
தற்போது இப்பள்ளியில் பணிபுரிந்த இயற்பியல் ஆசிரியரும் இடமாற்றம் பெற்றுள்ளார். அதேபோல உயர்நிலைகல்வி பிரிவில் கணக்கு, அறிவியல், ஆங்கிலம், புவியியல் உள்ளிட்ட 24ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் அலுவலக பதிவறை எழுத்தர், இரவு காவலர், துப்புரவு பணியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இத்தனை பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையிலும் கடந்த பொதுத்தேர்வில் 12ம் வகுப்பில் 80 சதவீதமும், பத்தாம் வகுப்பில் 85 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதற்கு தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் கூடுதல் உழைப்பே காரணமாகும்.
இந்த சூழ்நிலையில் இங்குள்ள காலி பணியிடங்களையும் பூர்த்தி செய்தால், கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியை நிச்சயம் எட்டும். எனவே இங்கு படிக்கும் பெரும்பாலான பழங்கியின, தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் நலன் கருதி உடனடியாக காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்துகுமார் கூறியுள்ளார்.
