மாதிரி வினா-விடை தொகுப்பு புத்தகங்கள் விழுப்புரத்தில் விறுவிறு விற்பனை
மாதிரி வினா-விடை தொகுப்பு புத்தகங்கள் விழுப்புரத்தில் விறுவிறு விற்பனை
UPDATED : நவ 15, 2014 12:00 AM
ADDED : நவ 15, 2014 11:07 AM
விழுப்புரம்: தமிழ்நாடு மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசு பொதுத் தேர்வு மாதிரி வினா-விடை தொகுப்பு புத்தகங்கள் விற்பனை, விழுப்புரத்தில் விறுவிறுப்பாக நடந்தது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு மாதிரி வினா-விடை தொகுப்புகள் பாட வாரியாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, பொதுத் தேர்வு மாதிரி வினா-விடை தொகுப்பு புத்தகங்கள், மாநிலம் முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் விற்பனைக்கு வந்தன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து, 200 ரூபாய் எனவும், பிளஸ் பாடங்களுக்கு பிரிவுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டது. விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி வினா-விடை தொகுப்பு புத்தகங்கள் விற்பனையை, பள்ளி முதல்வர் பாட்சா துவக்கி வைத்தார்.
இப்பள்ளி மையத்திற்கு முதற்கட்டமாக பத்தாம் வகுப்பு பாடப்புத்தக தொகுப்பு 770 (தமிழ் வழி) எண்ணிக்கை, ஆங்கில வழி பாடத்தொகுப்பு 1,500 எண்ணிக்கையில் வர வழைக்கப் பட்டது. இதேபோல், பிளஸ் 2 வகுப்பு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியிலான பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்கவுண்ட்ஸ், காமர்ஸ், எக்னாமிக்ஸ் மற்றும் அடிப்படை கணிதம் பாடங்களுக்கான புத்தக தொகுப்புகள் பெற்றுள்ளன.
பற்றாக்குறை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாட வகுப்புகளுக்கான ஆங்கில வழி மாதிரி வினா-விடை தொகுப்பு புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக அனுப்பி வைக்குமாறு, மாவட்ட கல்வித்துறை அலுவலகம் மூலம் மாநில பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வெளியூரில் இருந்து விழுப்புரத்தில் விற்பனை மையத்திற்கு வந்த பின், குறிப்பிட்ட பாடத்திற்கான மாதிரி வினா-விடை தொகுப்பு கிடைக்காத நிலையில், பெற்றோர்கள் பலரும் ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில்கொண்டு, போதிய அளவு வினா-விடை தொகுப்பு புத்தகங்களை அனுப்பி வைப்பதற்கு, மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் மையம்
விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வினா-விடை புத்தக விநியோகம், ஒரு மையத்தில் மட்டும் செயல்படுகிறது. மாவட்ட தலைநகரான விழுப்புரத்திற்கு வருவதற்கு கள்ளக்குறிச்சி பகுதி மக்கள், அங்கிருந்து 80 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவர்களின் பெற்றோர், விழுப்புரம் வந்து வினா-விடை மாதிரி தொகுப்பு புத்தகத்தை பெற 100 ரூபாய் வரை பஸ் கட்டணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. கூடுதலாக கள்ளக்குறிச்சியிலும் ஒரு விற்பனை மையத்தை துவக்க வேண்டும். இதன்மூலம் சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுரும் உள்ளிட்ட பகுதி மாணவர்களின் பெற்றோரும் பயனடைவர். இப்பிரச்னையை தீர்க்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

