பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் மேனிலைத் தொட்டி
பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் மேனிலைத் தொட்டி
UPDATED : நவ 18, 2014 12:00 AM
ADDED : நவ 18, 2014 10:56 AM
திருத்தணி: பள்ளி வளாகத்தில், உள்ள குடிநீர் மேனிலைத் தொட்டி பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேனிலைத் தொட்டி கட்டப்பட்டது. இதன்மூலம் பள்ளி மற்றும் நாபளூர் கிராம தெருக்குழாய் களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் முறையாக, குடிநீர் தொட்டியை பராமரிக்காததால், தற்போது, தொட்டியின் துாண்கள், அதன் அடி மற்றும் மேல்பாகத்தில் விரிசல் அடைந்துள்ளது. குறிப்பாக, துாண்கள் பழுதடைந்து கம்பிகளும் துருப்பிடித்துள்ளதால், எந்த நேரத்திலும் குடிநீர் மேனிலைத் தொட்டி இடிந்து விழும் நிலை உள்ளது.
கடந்த ஒன்றரை மாதமாக, இத்தொட்டியில் தண்ணீரும் ஏற்றுவதில்லை. பழுதடைந்த தொட்டியின் கீழ் மாணவர்கள் விளையாடவும், குடிநீர் பிடிக்கவும் செல்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன், பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

