ரயில் பல்கலைக்கழகத்தை துவக்க ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மும்முரம்
ரயில் பல்கலைக்கழகத்தை துவக்க ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மும்முரம்
UPDATED : டிச 07, 2014 12:00 AM
ADDED : டிச 07, 2014 12:34 PM
புதுடில்லி: அதிவேக ரயில்கள் என அழைக்கப்படும் புல்லட் ரயில்களுக்காக, சீனாவின் உதவியுடன், முதல் ரயில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சீனா பயணம்
நாட்டில் பல பகுதிகளுக்கு, புல்லட் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதனால், புல்லட் ரயில்கள் இயக்கத்தில் முன்னிலை வகிக்கும் சீனாவுக்கு, கடந்த வாரம், இந்திய ரயில்வே அதிகாரிகள் குழுவினர் விஜயம் செய்தனர்.
பீஜிங் சென்ற அவர்கள், புல்லட் ரயில் இயக்கம் தொடர்பாக, சீன நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதோடு, அந்நாட்டில் உள்ள இரண்டு பழமையான ரயில் பல்கலை கழகங்களான, பீஜிங் ஜியோடாங் பல்கலை மற்றும் லான்சான் ஜியோடாங் பல்கலை போன்றவற்றுக்கும் சென்று, அதன் செயல்பாடுகள் உட்பட, பல விஷயங்களையும் பார்வையிட்டனர்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பங்களில் ஒன்றான, நாட்டின் முதல் ரயில் பல்கலை அமைக்கும் பணியில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பான வரைவு திட்டம் தயாரிக்க, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., பட்டதாரிகள் அடங்கிய குழு ஒன்றை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார்.
கடிதம்
அதனால், அமைச்சர் சுரேஷ் பிரபுவின் உத்தரவை நிறைவேற்ற, அனைத்து ரயில்வே மண்டல தலைமை அலுவலகங்களும், ரயில்வே வாரிய தலைவர் கேஜ்பியே, கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் பணியாற்றும் அதிகாரிகளில், ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் ஐ.ஐ.எம்.,க்களில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆலோசனைகள்
மண்டல தலைமை அலுவலகங்கள் அனுப் பும் பட்டியல் அடிப்படையில், ரயில்வே அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவினர் ரயில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு வழங்குவர். இதன்பின், ரயில் பல்கலை கழகம் அமைப்பது தொடர்பான, செயல்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அது, அடுத்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.
நான்கு அமைக்க திட்டம்
* நாட்டில், நான்கு ரயில் பல்கலை கழகங்கள் அமைக்க வேண்டும் என்பது, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டம்
* அதேநேரத்தில், இந்த ரயில் பல்கலைக்கழகங்களை தனியாக துவக்குவதா அல்லது தற்போதைய பல்கலைக்கழகங்களின் இணைப்பாக துவக்குவதா என்பது முடிவாகவில்லை.
* புதிதாக துவக்கப்பட உள்ள ரயில் பல்கலைக்கழகங்களில், அதிவேக ரயில்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
