தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"சேரநாட்டின் தலைநகராக கரூர் விளங்கியதை நாணய ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தினேன்"

"சேரநாட்டின் தலைநகராக கரூர் விளங்கியதை நாணய ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தினேன்"

"சேரநாட்டின் தலைநகராக கரூர் விளங்கியதை நாணய ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தினேன்"


UPDATED : டிச 13, 2014 12:00 AM

ADDED : டிச 13, 2014 02:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2014 12:00 AM ADDED : டிச 13, 2014 02:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோட்டில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த பாரதி விழாவில், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் சுப்பராயலுவுக்கு, பாரதி விருது மற்றும், 25 ஆயிரம் ரூபாய் பண முடிப்பும் வழங்கி, நாணயவியல் ஆய்வாளர் மற்றும் தினமலர் ஆசிரியர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: பேராசிரியர் சுப்பராயலு, கடந்த, 30 ஆண்டுகளாக தமிழக வரலாற்றுக்கு ஆற்றியுள்ள அவரது கடும் உழைப்புக்கு, சரியான பாராட்டு கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.

செம்மொழி மாநாட்டில் அவருக்கு அதற்கான பரிசு கிடைத்திருக்கும் என எண்ணினேன்; கிடைக்கவில்லை. அவர் கல்லூரி படிப்புக்குப்பின், தமிழ் ஆராய்ச்சி, தமிழ் வளர்ச்சிக்காக, சங்க இலக்கிய சொற்களை பிரித்து எழுதும் பணியை ஆற்றினார். பின், ஜப்பான் பல்கலை கழகம், கரோஷிமாவுடன் இணைந்து சோழர் கால கல்வெட்டுக்கள், செப்பேடுகள் படித்து, மிகப்பெரிய வரலாற்று நூலை எழுதினார். பின், கொடுமணல் அகழ்வாராய்ச்சியில், புலவர் ராசு, பேராசிரியர் ராஜன் போன்றோருடன் ஈடுபட்டு, அற்புதமான ஆய்வை நிகழ்த்தினார்.

அதில், குறிஈடுகளையும், தமிழ் பிராமி எழுத்துக்களையும் வரிசைப்படுத்தினார். இதை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவனை பாராட்டும் நூலான ஐராவதம் என்ற நூலில் கட்டுரையாக வெளியிட்டு, பெருமை சேர்த்தார். பத்திரிகை துறையை சார்ந்த நான், தொல்லியல், வரலாறு சார்ந்த துறையிலும், நாணயங்களின் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டதை தெரிவிக்க விரும்புகிறேன்.

நான், திருச்சியில் பணி செய்தபோது, கையால் அச்சுக் கோர்க்கும் முறையில், ஆங்கில எழுத்துக்களை, எட்டு மணி நேரத்தில், மூன்று பத்தி அளவிற்கு அச்சுக் கோர்ப்போம். அதை தமிழில், அச்சுக் கோர்க்கும்போது, எட்டு மணி நேரத்தில், ஒரு பத்தி மட்டுமே கோர்க்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம், தமிழில் எழுத்துக்கள் அதிகம் இருப்பதேயாகும்.

எனவே, தமிழில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைத்தால் என்ன என்று சிந்தித்தேன். அப்போது, பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை, தினமலரில் புகுந்த நினைத்தேன். அதற்கு, தமிழ் ஆர்வலர்கள் எதிர்க்கும் நிலை ஏற்படும் என்பதால், அதை தவிர்த்தேன். இருந்தும், தமிழ் எழுத்துக்களை குறைக்கும் ஆர்வம் என்னிடம் தொடர்ந்தது. ஐராவதம் மகாதேவன் மூலம் தமிழ் பிராமி எழுத்துக்கள் குறித்து படித்தேன்.

அப்போது, மதுரையில், ஒரு நாணயம் சேகரிப்பவர், சதுரை வடிவ காசு ஒன்றை கொடுத்தார். அதில், ஒருபுறம் குதிரை வடிவம் இருந்தது. அதன்மேல் தமிழ் பிராமி எழுத்து முறையில், பெருவழுதி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதன்பின், காசியில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான மாநாட்டில், கட்டுரை ஒன்றை படித்தேன். கடந்த, 1957 வரை, சங்ககால சேர நாணயங்கள் கிடைக்கவில்லை.

சங்ககால சேரர்கள் நாணயங்கள் வெளியிடவில்லையா? என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. அப்போது, மதுரையில் ஒரு வணிகர் மூலம், எனக்கு ஐந்து காசுகள் கிடைத்தன. பழங்கால காசுகளில், பாட்டினா என்ற பூச்சு இருக்கும். அந்த பூச்சுடன் கிடைத்த ஐந்து நாணயங்களில், வில், அம்பு குறிகள் இருந்தன. இது, சேர நாணயங்கள் என உறுதி செய்தேன். அந்த நாணயங்கள், கரூரில் இருந்து கிடைத்திருக்கும் என்ற எண்ணத்தில் கரூர் சென்றேன். அங்குள்ள சில கடைகளில், இதேபோன்ற சேர நாணயங்கள், டப்பாக்களில் வைத்திருந்தனர். அவை எங்கிருந்து கிடைத்தது என கேட்டபோது, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், கொடுத்ததாக தெரிவித்தனர்.

அங்குள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் தோண்டியபோது, பெரிய அளவில் செப்பு நாணயப்புதையல் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதில் இருந்து நாணயங்களை, கரூரில் உள்ள கடைகளில், செம்பிற்காக விற்பனை செய்தது தெரியவந்தது. அவை விலை மதிப்பற்றவை என தெரிவித்தேன். அந்த நாணயங்கள் மூலம், சேரர்களின் தலைநகர், கரூர் என்பது உறுதியானது. கடந்த, 100 ஆண்டுகளாக கேரளாவை சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள், இப்போது இருக்கும் கேரளாதான், சங்ககாலச் சேரநாடு என்று கூறி வந்தனர்.

கரூரில் கிடைத்த நாணயங்கள் மூலம், கேரளாவில் உள்ள வரலாற்று பேராசிரியர்கள், சங்ககால சேர நாடு, தமிழகத்தில்தான் இருந்தது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். கிருஷ்ணகிரி மலைவாழ் மக்களே நூறு ஆண்டு வரலாற்றை மாற்றினார்கள் என்பது பெருமைக்குரியதாகும். இவ்வாறு அவர் பேசினார். கனடா உதயன் வார இதழ் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட பலர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us