தமிழ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வு செய்ய குழு அமைப்பு
தமிழ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வு செய்ய குழு அமைப்பு
UPDATED : ஜன 29, 2015 12:00 AM
ADDED : ஜன 29, 2015 03:27 PM
கடந்த, 2012 பிப்., 10ல், தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தராக திருமலை பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வரும் பிப்., மாதம் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆட்சிக்குழு:
இந்நிலையில், புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர்களான அண்ணாமலை பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துவீரப்பன், புதுச்சேரி மத்திய பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் அறிவுநம்பி மற்றும் பூண்டி புஷ்பம் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
நியமனம்:
தவிர, அரசு மற்றும் கவர்னர் தரப்பில், தலா, ஒருவர் நியமிக்கப்படுவர். அவர்கள் நியமிக்கப்பட்ட பின், ஐந்து பேர் கொண்ட குழு, புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும். துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்து, புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் வரை, பல்கலையின் அன்றாட பணிகளை மேற்கொள்ள, துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
துணை வேந்தர் பொறுப்புக்குழு அமைப்பாளராக தமிழ் வளர்ச்சித்துறை செயலர் ராஜாராம், பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர்களான தமிழ் பல்கலையின் கலை புலத்தலைவர் அங்கயற்கண்ணி, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் தமிழியல் பண்பாட்டு புலத்தலைவர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
பரிந்துரை:
இந்த நியமனம் தொடர்பாக, தமிழக கவர்னரும், பல்கலை வேந்தருமான ரோசய்யாவிடம் ஒப்புதல் பெறுவதற்காக, பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என, பல்கலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
