சட்டக் கல்லூரி இணைப்பு விவகாரம்; பதிலளிக்க தமிழக அரசுக்கு ‘நோட்டீஸ்’
சட்டக் கல்லூரி இணைப்பு விவகாரம்; பதிலளிக்க தமிழக அரசுக்கு ‘நோட்டீஸ்’
UPDATED : பிப் 05, 2015 12:00 AM
ADDED : பிப் 06, 2015 09:59 AM
சென்னை: சட்டக் கல்லூரிக்கு இணைப்பு கோரிய விண்ணப்பத்தை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் நிராகரித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ம.க., நிறுவனரும், வன்னியர் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான ராமதாஸ், மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு ’நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
ராமதாஸ், தாக்கல் செய்த மனு:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், ’சரஸ்வதி சட்டக் கல்லூரி’ என்ற பெயரில், சட்டக் கல்லூரி துவங்க, அறக்கட்டளை தீர்மானம் நிறைவேற்றியது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் சுட்டிக்காட்டிய குறைகளை, நிவர்த்தி செய்தோம். சட்டக் கல்லூரிக்கு, பல்கலைக் கழகத்தின் இணைப்பு (அபிலியேஷன்) கோரிய விண்ணப்பம், கடந்த மாதம், 28ம் தேதி நிராகரிக்கப்பட்டது.
தனியார், சட்டக் கல்லூரி துவங்க தடை விதித்து, சட்டம் கொண்டு வரப்பட்டதை காரணம் காட்டி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன், எங்களுக்கு தடையில்லா சான்றிதழ், 2013 பிப்ரவரியில், மாநில சட்டத் துறை வழங்கி விட்டது. எனவே, தமிழக அரசின் சட்டம், எங்களுக்கு பொருந்தாது. புதிய சட்டம் என்ற பெயரில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செல்லாததாக ஆக்க முடியாது.
கட்டடம் கட்டப்பட்டு, ஆசிரியர், ஊழியர் நியமனம் செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழும் பெறப்பட்ட பின், தற்போது எங்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. ஆண்டுக்கணக்கில், இந்த விஷயத்தை சட்டத் துறை இழுத்தடிக்கிறது. தடையில்லா சான்றிதழ் வழங்கிய பின், சட்டக் கல்லூரி துவங்குவதற்காக, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டு உள்ளது.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் விதத்தில், மாநில அரசு செயல்படுகிறது. பொதுமக்கள், மாணவர்களின் நலன்களுக்கு எதிராக, சட்டப் பல்கலைக் கழகம் செயல்படுகிறது. எனவே, அம்பேத்கர் சட்டப் பல்கலையின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எங்களின் உரிமையில் குறுக்கிட, சட்டத் துறைக்கு தடை விதிக்க வேண்டும். பல்கலையின் இணைப்பு வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை, நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.பாலு ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கும், சட்டப் பல்கலைக் கழகத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 13ம் தேதிக்கு, நீதிபதி சிவஞானம் தள்ளி வைத்தார்.
