நன்கு கல்வி கற்றால் என்னைப் போல பிரதமராகலாம்: மன்மோகன் சிங்
நன்கு கல்வி கற்றால் என்னைப் போல பிரதமராகலாம்: மன்மோகன் சிங்
UPDATED : நவ 15, 2009 12:00 AM
ADDED : நவ 15, 2009 11:09 AM
குழந்தைகள் தினத்தையொட்டி, மாணவர்கள் குழு ஒன்று, பிரதமர் மற்றும் அவரது மனைவி குருசரண் கவுரை சந்தித்தது. அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசிய மாணவர்கள், உங்களைப் போன்ற தலைவராக வருவதற்கான வழிமுறைகளை தெரிவியுங்கள் என கேட்டனர். மேலும், விலைவாசி உயர்வு முதல் கூட்டணி ஆட்சி வரையிலான மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்தார்.
மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பதில்: நான் சாதாரண மனிதன்; என்னால் பிரதமராக முடிந்தது என்றால், உங்களாலும் முடியும். நான் சாதாரண நடுத்தர வகுப்பு குடும்பத்தில் பிறந்தேன். எனது இன்றைய நிலைக்கு கல்வியே முக்கிய காரணம். எனவே, கல்வி பெற கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாட்டின் அனைத்து குழந்தைகளும், தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதி பெற வேண்டுமென விரும்புகிறேன். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இன்னும் ஓராண்டில், பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். கூட்டணி ஆட்சியில் அதிகம் பேசுவதால் பயனில்லை. அது மட்டுமல்லாமல், அதிகம் பேசுவதாலேயே விஷயங்கள் சிக்கலாகும் என்பது என் கருத்து. என்னை பலவீனமான பிரதமர் என கூறுவதைக் கேட்டு பயப்படவில்லை. குற்றம் சாட்டுவதே, எதிர்க்கட்சிகளின் வேலை. வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நிலைமை சரியில்லை என்பதை அறிந்துள்ளேன். அங்கு செயல்பட்டு வரும் உல்பா பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் கூறினார்.
