தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த ஜரீனா பேகத்திற்கு பதக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த ஜரீனா பேகத்திற்கு பதக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த ஜரீனா பேகத்திற்கு பதக்கம்


UPDATED : நவ 26, 2009 12:00 AM

ADDED : நவ 26, 2009 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2009 12:00 AM ADDED : நவ 26, 2009 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கென பிரத்தியேகமாக, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி துவங்கியது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது.

இதில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜரீனா பேகத்தை பாராட்டி, தினமலர் ஆசிரியர் பரிசு மற்றும் பதக்கத்தை வழங்கினார். எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் சாதாரண வேலை பார்க்கும் தொழிலாளியின் மகள், 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று சாதித்தது எப்படி...? அவரே கூறுகிறார்:

எனது தந்தை இப்ராகிம்; அம்மா, சல்மா. எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை. அப்பா ஐந்தாம் வகுப்பை தாண்டி படிக்கவில்லை; அம்மா படிக்கவில்லை. கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஒன்பதாம் வகுப்பு முதல், புத்தா தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன்.படிப்பு என்றால், எனக்கு கொள்ளை ஆசை. அதனால், சிறிய வயதில் இருந்தே நன்றாக படித்து வருகிறேன். அண்ணன், பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். தங்கை, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.

தந்தையின் வருமானம் சொல்லும்படியாக இல்லை; மிகவும் சொற்ப வருமானம் தான். அதனால், படிப்புச் செலவை சரிக்கட்ட, அண்ணன் பகுதி நேர வேலை பார்த்து சிறிது சம்பாதிக்கிறார்.தினமலர் நடத்தும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியைப் பற்றி முன்கூட்டியே நான் அறிவேன். கடந்த ஆண்டு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மேடையில் மாணவியர் விருதுகளையும், பரிசுகளையும் பெற்றதை பார்த்தபோது, அடுத்த ஆண்டு நான் பரிசு வாங்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டேன்.

அதன்படி, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் வழங்கிய வினாத்தாள்களை பார்த்து, அதற்கேற்ப தேர்வுக்கு தயாரானேன். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வழங்கிய, டிப்ஸ்கள் மிகவும் உதவின.பள்ளியில் ஆசிரியர்களும், என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர். இதனால் தான், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற முடிந்தது. என்னால் முடிந்தவரை படிக்க வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.

அதனால், தொடர்ந்து படிப்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது கனவு.இவ்வாறு ஜரீனா பேகம் கூறினார்.முன்னதாக, மாணவர்கள் மத்தியில் ஜரீனா பேசுகையில், மாணவர்கள் தயவு செய்து, டிவி பார்க்க வேண்டாம். படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள்; வெற்றி பெறுவீர்கள் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us