இடைநிலை ஆசிரியராக பதவி குறைப்பு: பள்ளி நிர்வாகத்தின் உத்தரவு ரத்து
இடைநிலை ஆசிரியராக பதவி குறைப்பு: பள்ளி நிர்வாகத்தின் உத்தரவு ரத்து
UPDATED : ஜன 23, 2010 12:00 AM
ADDED : ஜன 23, 2010 01:11 PM
அ நிறம் | அளவு
திருவண்ணாமலையில் சுல்தான்பேட்டை முஸ்லிம் துவக்கப் பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியராக அப்துல்கரீம் என்பவர் பணியாற்றி வந்தார். இவரிடம் 12 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மெமோ வழங்கப்பட்டது. இதற்கு, தலைமை ஆசிரியர் அப்துல்கரீம் விளக்கம் அளித்தார். இதையடுத்து, இடைநிலை ஆசிரியராக பதவி குறைப்பு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்துல்கரீம் மனு தாக்கல் செய்தார். எவ்வித விசாரணையும் நடத்தாமல், சந்தர்ப்பமும் வழங்காமல் பதவி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இயற்கை நியதி மீறப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார்.
மனுவை நீதிபதி வேணுகோபால் விசாரித்தார். அப்துல்கரீம் சார்பில், வக்கீல் எஸ்.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். நீதிபதி வேணுகோபால் பிறப்பித்த உத்தரவு: தலைமை ஆசிரியர் அளித்த விளக்கத்தை பார்க்கும் போது, அவர் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். எனவே, குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக் கொண்டதாக கூற முடியாது. தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து, இடைநிலை ஆசிரியராக பதவி குறைப்பு செய்தது ஒரு கடுமையான தண்டனை.
குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளாத போது, அதுகுறித்து விரிவான விசாரணையை பள்ளி நிர்வாகம் நடத்த வேண்டும். இயற்கை நியதியை பின்பற்றி அதை செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை, அவர் அளித்த விளக்கத்தின்படி விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இயற்கை நியதி மீறப்பட்டுள்ளது தெளிவாகிறது.
எனவே, பதவி குறைப்பு செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவது பள்ளி நிர்வாகத்தைப் பொறுத்தது. அவ்வாறு விசாரணை நடத்தினால் மனுதாரருக்கு போதிய சந்தர்ப்பம் வழங்க வேண்டும். ஆறு வாரங்களுக்குள் விசாரணை நடவடிக்கையை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.
