தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில நூலகத்திற்கு வரும் நூல்களை தரம் பார்த்து சேர்க்க வேண்டுகோள்

மாநில நூலகத்திற்கு வரும் நூல்களை தரம் பார்த்து சேர்க்க வேண்டுகோள்

மாநில நூலகத்திற்கு வரும் நூல்களை தரம் பார்த்து சேர்க்க வேண்டுகோள்


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 01:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 01:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இவற்றின் மூலமாக, கரையான் அரித்த புத்தகங்களும், தரமில்லாத புத்தகங்களும், ஒரே பிரிவின் கீழ் பலபேர் எழுதிய நூல்களும், சர்வதேச தரத்தில் அமையும் நூலகத்திற்கு சென்றுவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.


ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம், சர்வதேச தரத்தில் 180 கோடி ரூபாய் செலவில், சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப் பட்டு வருகிறது. எட்டு ஏக்கர் பரப்பளவில், எட்டு தளங்களுடன், பல்வேறு நவீன வசதிகளுடன் இந்நூலகம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 140 சதுர அடி பரப்பளவில் அமையும் நூலகத்தின் கட்டுமானப் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நூலகத்திற்காக, சென்னையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு, நன்கொடையாக வழங்க நூல்களை சேகரித்து வருகின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட உள்ளன. மேலும், நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளும் நூல்களை சேகரித்து வருகின்றன.

நூல்களை நன்கொடையாக அளிப்பது வரவேற்கக் கூடிய விஷயம் என்றாலும், அதில் ஆபத்து நிறைந்திருக்கிறது என்பதையும் உணர வேண்டியுள்ளது. சேகரிக்கப்படும் நூல்களில், கரையான் அரித்து சேதமாகிய மிகப் பழமையான நூல்களும், தரமற்ற நூல்களும் கலந்து, மாநில நூலகத்திற்கு சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூல்களை சேகரிக்கும் அமைப்புகள், நூல்கள் நல்ல முறையில் இருக்கிறதா, தரமான நூல்கள் தானா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை.

நூல்களை நன்கொடையாக வழங்குபவர்களும், நமது நூல்கள் மாநில நூலகத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், இருக்கின்ற புத்தகங்களை எல்லாம் வாரி வழங்குகின்றனர். மேலும், ஒரே பிரிவின் கீழ் பலபேர் எழுதிய புத்தகங்களும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.திருக்குறள், கம்ப ராமாயணம் போன்ற படைப்புகளை ஆராய்ந்து, ஏராளமானோர் தனித்தனியே தங்களது பார்வையில் நூல்களை எழுதியுள்ளனர்.

இதில், தரமான பதிப்புகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பள்ளி கையேடுகள் வர வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க வேண்டும். இவை எல்லாம், மாநில நூலகத்திற்கு செல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. கரையான் அரித்த புத்தகங்களை மாநில நூலகத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கு வைக்கப்படும் புதிய புத்தகங்களுக்கும் கரையான்கள் பரவி, அனைத்து நூல்களையும் பாழாக்கி விடும் ஆபத்து இருக்கிறது.

மேலும், எந்த ஒரு அளவுகோலும் இல்லாமல், தரமற்ற நூல்களை அங்கே வைத்தால், நூலகத்தின் மதிப்பு குறைய நேரிடலாம். இந்தியா மட்டுமில்லாமல், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள், நூலகத்திற்கு வந்து பார்வையிடுவார்கள் என்பதால், நூல்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், தமிழக அரசு மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு துறை தொடர்பான நூல்களையும் தனியாக பிரித்து, அதை அந்தந்த துறை நிபுணர்களை வைத்து ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் ஒப்புதல் பெற்ற நூல்கள் மட்டுமே நூலகத்தில் வைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் முறையில் அரிய நூல்களை தொகுத்து வைக்க வசதிகள் செய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் 200 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய நூல்களைக் கூட டிஜிட்டல் முறையில் கொண்டு வருகின்றனர். ஐ பாட் வசதியை பயன்படுத்தி நூல்களை பக்கம் பக்கமாக பார்க்க வசதி வந்து கொண்டிருக்கிறது. எனவே, தரமுள்ள நூல்களை மட்டுமே பாதுகாக்க வேண்டும். 18ம் நூற்றாண்டு, 19ம் நூற்றாண்டில் வெளியான அரிய நூல்களை தேடிக் கண்டுபிடித்து, மாநில நூலகத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும்.
அதுவே தமிழர்களின் பொக்கிஷமாக அமையும். சாதாரண நூல்களை இங்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நூல்கள் கல்லூரி, பள்ளி நூலகங்களியே இருக்கலாம். ஒரே துறையில் ஒரே விஷயத்தை சொல்லும் பல நூல்கள் இடம்பெற்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்கொடையாக பெறப்படும் நூல்களை, நேரடியாக மாநில நூலகத்திற்கு கொண்டு செல்லாமல், ஓரிடத்தில் வைத்து, அவற்றில் சேதம் இல்லாத நல்ல நூல்களை தரம் பிரிக்க வேண்டும்.

அதன்பின், அவற்றில் இருந்து தரமான நூல்களை தனியாகப் பிரித்து, அவற்றை மட்டும் மாநில நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கும் தினத்தன்று நூலகம் நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இடத்தை அடைப்பதற்காக வேகவேகமாக நூல்கள் சேகரிப்பது தவறான அணுகுமுறை. கிடைக்காத, அரிய நூல்களை மட்டுமே இந்நூலகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us