மாநகராட்சி அறிவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு: விஞ்ஞானத்துக்கான வித்து
மாநகராட்சி அறிவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு: விஞ்ஞானத்துக்கான வித்து
UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 04:26 PM
திருப்பூர்:
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான, 12 ஏக்கர் நிலத்தில், மாநகராட்சி அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், 5ம் தேதி திறந்து வைத்தார். பூங்கா, மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று அர்ப்பணிக்கப்பட்டது.காலை, 8:00 மணி முதல், சிங்காரிமேளம், பறை இசை, கவிநயா நாட்டியக்குழுவின் பரதநாட்டியம், உயிருள்ள டைனோசர் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள, டைனோசர் ரவுண்ட் -அப், மதுரையை சேர்ந்த இரட்டையர்களான அசோக் - ஆனந்த் குழுவினரின் பிரமிக்க வைத்த ஜக்கலர் நிகழ்ச்சி, கோவை பாலாவின் மேஜிக் ேஷா, காவடி ஆட்டம் என, அறிவியல் பூங்கா களைகட்டியிருந்தது.காலை 11:45 மணிக்கு, மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் சந்திரசேகர் முன்னிலையில், கோவை கலெக்டர் கிராந்திகுமார், பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.வனத்துக்குள் திருப்பூர் -9 திட்டம் பூர்த்தியானதை தொடர்ந்து, 10வது திட்டத்துக்கான மரக்கன்று தயாரிப்புக்காக, முக்கிய விருந்தினர்கள் விதைகளை பதியமிட்டனர்.மூங்கில் பூங்கா
வரவேற்புரையாற்றிய வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம்: மியாவாகி முறையில், அடர்வனம் உருவாக்கும் முயற்சி, மூங்கில் பூங்காவாக மாறியது; பிறகு, அறிவியல் பூங்காவாக உயர்ந்துள்ளது. வனத்துறை அலுவலர்கள், தங்கள் பணிசார் ஆய்வுக்காக, இங்கு வந்து செல்கின்றனர். இது, மாணவ, மாணவியருக்கான அறிவியல் மையமாக உயரும். அறிவு வளர்க்கும், ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு தலமாகவும் மாற்றப்பட்டுள்ளது.பூங்கா பிரமாண்டம்
கோவை கலெக்டர் கிராந்திகுமார்:
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், மரம் வளர்ப்பு செலவு, தலா, 200 ரூபாயாக இருந்ததை, 66 ரூபாயாக குறைந்தது முதலாக, திட்டக்குழு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அறிவு மற்றும் அறிவியல் பகிர்வுக்கான பூங்கா, பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதுபோன்ற அமைப்பு களால், தமிழகத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும். தொழில் நகரில், ஆக்ஸிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும்.முன்னோடி திட்டம்
மேயர் தினேஷ்குமார்:
உலகின் முன்னோடி திட்டமாக, வனத்துக்குள் திருப்பூர் திட்டம் உயர்ந்துள்ளது. உலக வரைபடத்தில் திருப்பூரை இடம்பெற செய்து, தங்கள் உழைப்பால் தலைநிமிர செய்த பெருமை தொழில்துறையினரையே சாரும். நீரோடும் நொய்யல் என்ற இலக்குடன், பசுமை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அடுத்த சந்ததியினருக்கு, கலை, கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் வகையில், பசுமை பணி நடந்த வருகிறது. மாநகராட்சி அறிவியல் பூங்காவால், மாவட்டத்துக்கே பெருமை கிடைத்துள்ளதுநொய்யலில் பூங்கா
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்:
மாநகராட்சி அறிவியல் பூங்கா என்பது சாதாரண பூங்கா அல்ல; கருத்தாழம் மிகுந்த பூங்கா. இது, எதிர்கால சந்ததியினருக்கான பொக்கிஷம் போன்றது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், வாராவாரம், கல்வி சுற்றுலாவாக, அறிவியல் பூங்காவுக்கு வந்து செல்ல ஆவன செய்யப்படும். மாநகராட்சியின் காலியிடங்கள், ரிசர்வ் சைட் இடங்களில், மரம் வளர்க்கும் திட்டம் வேகப்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நொய்யல் கரையின் இருபுறமும், நாட்டு மரங்களுடன், சிறு பூங்கா உருவாக்கப்படும்.ஏற்றுமதியாளருக்கு மரியாதை
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்: பிராண்ட் திருப்பூர் - கிரீன் திருப்பூர் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் லட்சக்கணக்கான மரம் வளர்த்ததால், ஏற்றுமதியாளர்கள் பயனடைந்துள்ளனர். வெளிநாட்டு வர்த்தகர்கள், மரம் வளர்ப்பு திட்டத்தை கேட்டறிந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு தனி மரியாதை அளிக்கின்றனர். போட்டி நாடுகளில் இல்லாத பசுமை வளர்ப்பு தரச்சான்றை, வனத்துக்குள் திருப்பூர் திட்டம் தேடிக்கொடுத்திருக்கிறது; இது, மென்மேலும் தொடர வேண்டும்.திருப்பூர் மாநகராட்சி மற்றும் இடுவாய் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள், அறிவியல் பூங்காவை பார்வையிட்டு, செல்பி மற்றும் குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.ஈஸ்ட்மேன் குழும தலைவர் சந்திரன், சென்னை சில்க்ஸ் டீமேஜ் பில்டர்ஸ் தலைவர் நந்தகோபால், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானி மரியோ டோமினிக் சேவியோ, ராயல் கிளாசிக் மில்ஸ் தலைவர் கோபாலகிருஷ்ணன், பி.ஏ.பி., பாசன சபை தலைவர் ஈஸ்வரன், இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.