சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து வழக்கு; பெரியார் பல்கலை பதிலளிக்க உத்தரவு
சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து வழக்கு; பெரியார் பல்கலை பதிலளிக்க உத்தரவு
UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 10:23 PM
சென்னை:
சேலம் பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளரை, சஸ்பெண்ட் செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கும், பல்கலைக்கும் உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.சேலம் பெரியார் பல்கலை பதிவாளராக இருந்தவர் டாக்டர் தங்கவேலு; இவருக்கு எதிரான நிதி முறைகேடு புகார் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில், &'சஸ்பெண்ட்&' செய்ய, பல்கலை துணைவேந்தருக்கு, உயர் கல்வித்துறை பரிந்துரைத்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தங்கவேலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி, பணி ஓய்வு பெறும் நிலையில், சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை பிறப்பிக்க, பெரியார் பல்கலை சட்டப்படி, அரசுக்கு அதிகாரம் இல்லை.பல்கலை சிண்டிகேட் தான், அதிகாரம் படைத்தது. ஓய்வு பெற, சிண்டிகேட் அனுமதித்துள்ளது. எனவே, அரசு உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும் என்றார். தற்போதைய பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.சந்திரகுமார், பரிந்துரைகள், பல்கலை சிண்டிகேட் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது; சிண்டிகேட் குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.பல்கலை ஊழியர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், &'பல்கலை துணைவேந்தர் மற்றும் முன்னாள் பதிவாளர் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக, ஏற்கனவே வழக்கு உள்ளது&' என்றார்.இதையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க, நீதிபதி மறுத்து விட்டார். அரசும், பல்கலையும் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, மார்ச் 14க்கு, நீதிபதி இளந்திரையன் தள்ளி வைத்தார்.அமைச்சர் அறிவிப்பு
சட்டத்தை மீறி நடந்தால், பெரியார் பல்கலை துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதாவது:
சென்னை பல்கலையின் வங்கி கணக்குகளை முடக்கியதை விடுவிக்க வேண்டும் என, பல்கலை பதிவாளர் தரப்பில் இருந்து, வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலையின் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது.சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேல், பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டிய காலத்தில், விடுப்பு எடுத்துள்ளார். இந்த நேரத்தில், அவர் விடுப்பு எடுக்க சட்டத்தில் இடமில்லை. அதேபோல், பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்தும், துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சட்டத்தை மீறி செயல்பட்டால், துணைவேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

