பெற்றோரை பதற்றமடைய செய்து பணம் பறிக்க முயற்சி; போலீஸ் எச்சரிக்கை
பெற்றோரை பதற்றமடைய செய்து பணம் பறிக்க முயற்சி; போலீஸ் எச்சரிக்கை
UPDATED : மே 02, 2024 12:00 AM
ADDED : மே 02, 2024 10:24 AM

சென்னை:
பண மோசடி வழக்கில் மகன், மகள் கைதாகி உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்து, பெற்றோரை பதற்றமடையச் செய்து, பணம் பறிக்கும் புதிய வகை உத்தியை, 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் அரங்கேற்றி வருகின்றனர்.
சென்னை நங்கநல்லுார் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரை, ஏப்., 24ம் தேதி காலை 11:00 மணிக்கு மர்ம நபர் ஒருவர், 'வாட்ஸாப் அழைப்பு' வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த மர்ம நபர், 50 லட்சம் ரூபாய் பண மோசடி வழக்கில், உங்கள் மகள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளோம். உங்கள் மகள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். நீங்களே உங்கள் மகளுடன் பேசுங்கள் என, கூறியுள்ளனர்.
அழும் குரல்
அப்போது, எதிர்முனையில் பேசிய தந்தையிடம், அந்த பெண் தேம்பி தேம்பி அழும் குரல் மட்டும் கேட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அந்த நபர், என் மகளை ஒன்றும் செய்து விடாதீர்கள். நான் தற்போது என்ன செய்ய வேண்டும்? என கேட்டுள்ளார்.
அதற்கு மர்ம நபர்கள், சற்று நேரத்தில் உங்கள் மகள் உள்ளிட்ட நான்கு பேர் கைதாகி இருக்கும் தகவல் மற்றும் அவர்களின் படங்களை, பத்திரிகை மற்றும் டிவி சேனல்களுக்கு தந்து விடுவோம்.
உங்கள் மகளின் எதிர்காலம் பாழாகாமல் இருக்க, அந்த பெண்ணை விடுவிக்க, நாங்கள் அனுப்பி வைக்கும், ஜிபே எண்ணுக்கு, உடனடியாக, 40,000 ரூபாய் அனுப்புங்கள் என மிரட்டி உள்ளனர்.
பணம் அனுப்ப முயற்சி
அவர்களின் பேச்சு, அசல் போலீஸ் அதிகாரிகள் பேசுவது போல இருந்துள்ளது. இதனால், மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என, அந்த நபர் பணம் அனுப்ப முயற்சி செய்துள்ளார்.
பதற்றத்தில், ஜிபேயில் மூன்று முறை பின் நம்பரை தவறாக பதிவு செய்ததால், பிளாக் ஆகி விட்டது. இதனால், அவரால் பணம் அனுப்ப முடியவில்லை. எதிர்முனையில் மிரட்டல் விடுக்கும் நபர்கள், விரைந்து பணம் அனுப்புங்கள். எங்களால், ஐந்து நிமிடங்கள் மட்டுமே காத்திருக்க முடியும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள் மகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என, எச்சரித்துள்ளனர்.
அப்போது தான் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் மகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், பதற்றமும் வாட்டி வதைத்தது. என்ன முடிவு எடுப்பது என, தெரியாமல் திணறும் சூழல் ஏற்பட்டது.
மர்ம நபர்கள் அளித்துள்ள ஐந்து நிமிடத்திற்குள் அருகில் உள்ள, காவல் நிலையத்திற்குக்கூட செல்ல முடியாத நிலையில், அந்த நபர் தவித்தார். தன் அருகில் இருந்த நண்பர் ஒருவரிடம், சைகையால் எங்கள் வீட்டிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என, கூறியுள்ளார். அதன்படி அவர் கேட்டதும், பொறியியல் மாணவியான அவர், ஆன்லைன் வகுப்பில் இருப்பதாக பதில் கிடைத்தது.
இந்த தகவலை கேட்டவுடன் தான் தந்தைக்கு உயிரே வந்துள்ளது. மர்ம நபர்களுடனான இணைப்பை துண்டித்துவிட்டு, வீட்டுக்கு சென்று மகளை பார்த்தார். மர்ம நபர்களும் விடுவதாக இல்லை. தொடர்ந்து வாட்ஸாப் அழைப்பு வாயிலாக தொடர்பு கொண்டபடி இருந்தனர். வங்கி கணக்கில், 5,000 ரூபாய் தான் இருக்கிறது என கூறியபோதிலும், அந்த தொகையையாவது அனுப்புமாறு வற்புறுத்தி உள்ளனர்.
பின்னர் அந்த நபர், புது வகை மோசடி குறித்து, சென்னை அசோக் நகரில் உள்ள, மாநில சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர், போலீசார் உதவியுடன் விழிப்புணர்வு, வீடியோ ஒன்றையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டுஉள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது:
நன்கு படித்து, சொந்தமாக தொழில் செய்து வரும் எனக்கே, ஒரு ஐந்து நிமிடத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. பொறியியல் படிக்கும் எங்கள் மகள், கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்று வேலையில் சேர உள்ளார். இந்த நேரத்தில் கைது என தகவல் பரவினால், அவள் வாழ்க்கை என்ன ஆவது?
எவ்வளவு பணம் கொடுத்தாவது மகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறது. படிக்காத பாமர மக்கள் இத்தகையை மோசடி நபர்களிடம் சிக்கினால் என்ன ஆவர் என்பதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
இத்தகையை மோசடி நபர்களிடம் இதய நோய் உள்ளவர்கள் சிக்கினால் என்ன ஆவது? பின் நம்பரை தவறாக பதிவு செய்ததால் என் பணம் பறிபோகாமல் தப்பியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1930ல் புகார் அளிக்கலாம்!
இந்த மோசடி குறித்து, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் கூறியதாவது:
அடையாளம் தெரியாத நபர்கள், வாட்ஸாப் அழைப்பு உள்ளிட்டவை வாயிலாக தொடர்பு கொண்டு, 'உங்கள், மகள், மகனை கடத்தி விட்டோம். அவர்களை மோசடி வழக்கில் கைது செய்துள்ளோம். அவர்களை விடுவிக்க பணம் வேண்டும் என கேட்டால் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் மகன், மகளை தொடர்பு கொண்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். பெற்றோரை பதற்றமடையச் செய்து, அசல் போலீஸ் அதிகாரிகள் போல பேசி, பணம் பறிக்கும் புதிய வகையான உத்தியை மர்ம நபர்கள் கையாள துவங்கி உள்ளனர். இந்த மோசடி கும்பல், விரைவில் கைது செய்யப்படும்.மர்ம நபர்களின் தொடர்புகள் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக, 1930 என்ற எண்ணிற்கும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.