நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றுவதா? அரசுக்கு பழனிசாமி கண்டனம்
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றுவதா? அரசுக்கு பழனிசாமி கண்டனம்
UPDATED : ஆக 19, 2024 12:00 AM
ADDED : ஆக 19, 2024 10:09 PM
சென்னை:
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில், மாணவர்களை தி.மு.க., அரசு ஏமாற்றுவதாக கூறி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தஞ்சாவூர் மாவட்டம், சிலம்பவேளங்காடு பகுதியை சேர்ந்த மாணவர் தனுஷ். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சி பெற முடியாததால், தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும், தி.மு.க., முதல்வர் தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பர பேச்சுகளை நம்பி ஏமாந்து, உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தன் கைகளில் இருப்பதை உணர வேண்டும்.
எம்.பி.,க்கள் 40 பேரை வைத்து, பார்லிமென்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் முதல்வர். வாரிசு அமைச்சர் சொன்ன, நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளியில் வரும்; இன்னும் எத்தனை மாணவர்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்.
இனியாவது, நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இருந்தால், அதை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அன்று ஆதரித்தவர்!
அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், நீட் தேர்வு தோல்வியால், தஞ்சாவூரில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாய் சவடால் விட்டிருக்கிறார். துாத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டு, 13 அப்பாவிகளை கொன்று ரத்தக்கறை படிந்த கைகளில்தான் இந்த பதிவை போட்டிருக்கிறார்.
நீட் தேர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பொய்யை, ஸ்டாலின் பேசி வருகிறார் என, ஆட்சியில் இருந்தபோது சொன்னவர் தான் பழனிசாமி. அப்படி பேசி, 14 மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாகி, ரத்தக்கறையை உடல் முழுதும் பூசிக் கொண்டவர். ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை ஆதரித்துவிட்டு, இன்று மாற்றி பேசுகிறார், என்றார்.