டில்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு மத்திய அமைச்சர் முருகன் தகவல்
டில்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு மத்திய அமைச்சர் முருகன் தகவல்
UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 11:40 AM

புதுச்சேரி:
டில்லியில் விரைவில் உலகளாவிய திருக்குறள் மாநாடு நடத்தப்படும் என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலையில் மனோவசியம் குறித்த இருநாள் சர்வதேச மாநாடு துவக்க விழா நேற்று நடந்தது.
சர்வதேச மாநாட்டினை துவக்கி வைத்து, தேசிய உளவியல் மாநாட்டில் சொற்களஞ்சியம் நுாலை வெளியிட்ட மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது:
மனித நேயம், விஞ்ஞான உணர்வு, சீர்த்திருத்த உணர்வை வளர்ப்பது இந்திய குடிமகனின் கடமையாகும்.
கடந்த நவம்பரில் பிரதமர், ஒரு நாடு ஒரு சந்தா முயற்சியை அறிமுகப்படுத்தி மருத்துவம், மேலாண்மை, சமூக அறிவியல், மனித நேய துறைகளில் அறிவார்ந்த மின் பத்திரிக்கைகள் அணுகலை நோக்கமாக செயல்படுத்தினார்.
இதன் மூலம் 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் 30 வெளியீட்டாளர்களிடம் இருந்து 13 ஆயிரம் இதழ்களை அணுகி பயனடைய முடியும்.
ஆசிரியர்கள் திருக்குறளால் ஈர்க்கப்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, இணையதளம், சாட் ஜிபிடி என எதுவாக இருந்தாலும் திருக்குறளுக்கு அப்பாற்பட்டது அல்ல. திருக்குறள் பொருள் நிரந்தரமானது. இது தமிழின் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்று. பிரதமர் மோடி உலகம் முழுதும் திருக்குறளை பரப்பி வருகிறார்.
உலகம் முழுதும் திருக்குறள் கலாசார மையம் அமைக்கப்படும் என தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 6 நாடுகளில் திருக்குறள் கலாசார மையத்தை உருவாக்கியுள்ளோம்.
டில்லியில் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என தமிழ் பற்றாளர்கள், சான்றாளர்கள் தொடர்ந்த வலியுறுத்தி வருகின்றனர். டில்லியில் விரைவில் உலகளாவிய திருக்குறள் மாநாடு நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.